கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய் நின்று பேசிய இடத்தின் சாலை நவீன ஸ்கேனர் கருவி மூலம் அளவீடு: 2வது நாளாக சிபிஐ ஆய்வு
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பிரவீன்குமார் தலைமையிலான 6 பேர் குழுவினர், மதுரையில் இருந்து கூடுதலாக வந்த சிபிஐ அதிகாரிகள் 6 பேர் என 12 பேரும் 2 கார்களில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் 2வது நாளாக நேற்று காலை 7 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்துக்கு வந்து ஆய்வை தொடர்ந்தனர். நேற்று முன்தினம் சாலை அளவீடு செய்த நிலையில் மீதமுள்ள சாலையில் நேற்று காலை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. தாங்கள் கொண்டு வந்திருந்த 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்தனர். விஜய் பிரசார வாகனம் வந்த சாலை, அவர் நின்று பேசிய இடத்தின் நீளம், அகலம் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டது. குறிப்பாக 41 பேர் பலியானதற்கு காரணமான குறிப்பிட்ட சம்பவ இடத்தில் மட்டும் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நுணுக்கமான ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
நேற்று காலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் வந்த சிபிஐ அதிகாரிகள் மாலை 4 மணி வரை சுமார் 9 மணி நேரம் மதிய உணவிற்கு கூட செல்லாமல் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்களில் சுமார் 15 மணி நேரம் ஆய்வு மற்றும் விசாரணை பணிகளை சிபிஐ அதிகாரிகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்றும் சாலையை போலீசார் அடைத்து இருந்ததோடு அங்கு தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
* 3டி லேசர் ஸ்கேனர் கருவியின் சிறப்பு
3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் சுமார் 400 மீட்டர் தூரம் வரை எளிதாக அளவீடு செய்ய முடியும். அதாவது சாலையின் நீளம், அகலம் எவ்வளவு என்பதை கையால் அளக்காமலே கண்டுபிடித்து விடலாம். அதேபோல் சாலையில் எவ்வளவு பேர் நிற்கலாம் என்பதையும் இந்த கருவி துல்லியமாக கணிக்கும் என்று கூறப்படுகிறது.