திருவள்ளூர், செங்கல்பட்டில் தொடர் மழையால் மக்கள் அவதி: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கல்பாக்கம், கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு, முதலியார்குப்பம், கூவத்தூர், கடப்பாக்கம், கோட்டைக்காடு, கடலூர், சின்னக்குப்பம், ஆலிகுப்பம், பெரியகுப்பம், ஒய்யாலிகுப்பம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், மெய்யூர், போதியூர், தேவனேரி, சூலேரிகாடு உள்ளிட்ட மீனவ குப்பங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், கடப்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், கேளம்பாக்கம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், பல்லாவரம், மேடவாக்கம், பாலூர், சித்தாமூர், மேல்மருவத்தூர், லத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும் வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு ஆகிய பகுதிகளில் மழை தொடர்வதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாலாஜாபாத், பழையசீவரம் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. திருக்கழுக்குன்றம் அடுத்த ஈசூர், பூதூர் தடுப்பணை, வாயலூர், வேப்பஞ்சேரி இடையே தடுப்பணை நிரம்பி வழிகிறது. கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் தடுப்பணையும் நிரம்பி பல ஆயிரம் கனஅடி தண்ணீர் பாலாற்றில் கலக்கிறது. முக்கிய ஏரிகளான மதுராந்தகம், பொன்விளைந்தகளத்தூர், மானாம்பதி, கொண்டங்கி, கொளவாய், காயார், பாலூர் உள்ளிட்ட பெரிய ஏரிகள் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மழை காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் இன்று போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் வழக்கத்தை விட கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது.
மழை காரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகள் வரத்து வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் சினேகா தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தேவி, சப்-கலெக்டர் மாலதி எலன் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் நிவாரண முகாம்கள் மற்றம் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. ஜேசிபி, உணவு பொட்டலங்கள், திருமண மண்டபம், பள்ளிகூடங்கள், சமுதாய கூடங்கள் தயார் நிலையில் உள்ளது. தீயணைப்பு படை வீரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மழை பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தயார் நிலையில் உள்ளனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை அகற்றுவதில் மாவட்ட நிர்வாகம் துரிதமான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்று காலையில் ஒருசில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்பட்டது. இந்த தொடர் மழையின் காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் ஜரூராக தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் இன்று காலை வரையில் மிக அதிகபட்சமாக பொன்னேரியில் 20.6 செ.மீ. மழையும், செங்குன்றம் 18.54 செ.மீ., கும்மிடிப்பூண்டியில் 16.9 செ.மீ., சோழவரத்தில் 14 செ.மீ. ஆவடியில் 9.2 செ.மீ. மழையும் பதிவானது.
மேலும் பள்ளிப்பட்டு 5 மி.மீ., ஜமீன் கொரட்டூர் 38 மி.மீ., பூந்தமல்லி 55 மி.மீ. திருவாலங்காடு 14 மி.மீ., திருத்தணி 4 மி.மீ., பூண்டி 24 மி.மீ., தாமரைப்பாக்கம் 47மி.மீ., திருவள்ளூர் 55மி.மீ., ஊத்துக்கோட்டை 19 மி.மீ. என மொத்தம் 105.34 செ.மீ. மழையும் சராசரியாக 7.23 செ.மீ. மழையும் பதிவானது.

