சென்னை: பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது. இதில் சென்னை - கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தார். இந்த தொடரில் அவர் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். ஆசிய இளையோர் போட்டியின் இறுதியில், ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது இந்தியா. இந்த அதிரடி வெற்றிக்கு கார்த்திகாவும் ஒரு முக்கிய காரணம்.
இந்த நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகாவை தனது அலுவலகத்துக்கு அழைத்து துருவ் விக்ரம் நேற்று பாராட்டி பரிசு வழங்கினார். ‘பைசன்’ படக்குழு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இயக்குனர் மாரி செல்வராஜ் ஊக்கத்தொகையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. பைசன் படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
