Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் இந்தியா கூட்டணி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வலிமையான எக்கு கோட்டை போல் உள்ளது:செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழகத்தில், இந்தியா கூட்டணியானது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வலிமையான எக்கு கோட்டை போன்று உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவபடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, பயங்கரவாத எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதை தொடர்ந்து, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் ஏற்பாட்டில், சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார்.

அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த ராஜீவ் காந்தியின் நினைவு நாள் இன்று, தொடர்ந்து ராகுல் காந்தியும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தற்பொழுது ஆபரேஷன் சிந்தூர் குறித்து பல்வேறு கேள்விகளை ராகுல் காந்தி வைத்திருக்கிறார். ஆனால் அதற்கு மோடி அரசிடம் பதில் இல்லை. பயங்கரவாதத்திற்கு தீர்வு காணாமல் இதை மோடி அரசு கைவிடக்கூடாது.

எல்லாம் முதல்வர்களும் தான் தான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதை காங்கிரஸ் வரவேற்கிறது. இந்தியா கூட்டணி தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வலிமையான எக்கு கோட்டை போல் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் இருக்கும் கூட்டணி போன்று வலிமையான கூட்டணி எங்காவது உண்டா? அடுத்த ஆட்சியும் இங்கு இந்தியா கூட்டணி ஆட்சி தான் வரும்.

அதிமுக-பாஜ கூட்டணி வலுவான கூட்டணி கிடையாது. கொள்கை கூட்டணி கிடையாது. அவர்களுக்குள்ளேயே எந்த பிரச்சினை வேண்டுமானாலும் வரலாம். நேற்று ஜெயலலிதாவை குற்றவாளி என்று கூறிய அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதா பற்றி காங்கிரஸ் இயக்கம் என்றைக்காவது தரம் தாழ்ந்த வகையில் பேசியிருக்கிறதா?. ஆனால் அவர்களை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசியவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். எனவே இது சந்தர்ப்பவாத கூட்டணி. ஆனால் எங்கள் கூட்டணி உறுதியான கொள்கை கூட்டணி, நிலையான கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜேஷ் குமார், ரூபி மனோகரன், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், அருள்பெத்தையா, தளபதி பாஸ்கர், எம்.எஸ்.காமராஜ், அமைப்பு செயலாளர் ராம் மோகன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.