சென்னை: தமிழகம் முழுவதும் 3 நாட்கள் நடந்த அதிரடி வேட்டையில் மாவட்ட வாரியாக 135 வழக்குகளில் தொடர்புடைய 78 குற்றவாளிகளை மாநில சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள சைபர் க்ரைம் வழக்குகளில் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் மாநில சைபர் க்ைரம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் மேற்பார்வையில், சைபர் க்ரைம் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி ஒன்றிய உள்துறை அமைச்சத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட என்சிஆர்பி போர்ட்டல் மற்றும் பிரதிபிம்ப் போர்டல் மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் விவரங்களை ஆராய்ந்து மற்றும் சைபர் கிரிமினல் நெட்வொர்க்குகள் மூலம் விசாரணை நடத்தியதில், 158 வழக்குகளில் ரூ.41.97 கோடி வரை நிதி மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
அதன்படி மாவட்ட வாரியாக மாநில சைபர் க்ரைம் எஸ்பிக்கள் ேமற்பார்வையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 135 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளில் 78 சைபர் குற்றவாளிகளை உரிய ஆதாரங்களின் அடிப்படையில் 3 நாள் அதிரடி வேட்டையில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 78 குற்றவாளிகளும் சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் இணைந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் மாநில சைபர் க்ரைம் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


