தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 165 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக வருகை: பதற்றமான பகுதிகளுக்கு அனுப்ப முடிவு
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தல் பணிக்கான 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி, பாதுகாப்பு பணிக்காக இதுவரை 25 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் அதிகப்பட்சமாக 90 வீரர்கள் வரை இடம் பெற்றிருப்பார்கள். இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பாக நடைபெறும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் 165 துணை ராணுவ வீரர்கள் நேற்று (ஏப்ரல் 1) முதல் படிப்படியாக தமிழகம் வர தொடங்கியுள்ளனர்.
இந்த 165 கம்பெனி துணை ராணுவ வீரர்களும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுவார்கள். எந்தெந்த பகுதிகளுக்கு எவ்வளவு துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். தற்போது 39 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் விவரம் வெளியிடப்பட்டுள்ளதால், எந்தெந்த வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியும் பணிகளை போலீசார் செய்து வருகிறார்கள். அந்த பகுதிகளுக்கு கூடுதல் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, தமிழகத்தில் அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் அமைதியான மற்றும் பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.