சென்னை: தமிழகத்தில் 9ம் தேதி வரையில் வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதற்கிடையே, வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் நேற்று தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை முதலே மழை பெய்தது. பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது.
இதையடுத்து, இன்று முதல் 8ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். அதன் தொடர்ச்சியாக நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் பனி மூட்டம் காணப்படும். அதற்கு பிறகு வறண்ட வானிலை காணப்படும். மேலும், 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும்.


