Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நவம்பர் 1ம் தேதியை ஏன் தமிழ்நாடு நாளாக கொண்டாடக் கூடாது? விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1956-ம் ஆண்டு நவம்பர் 01ம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் 'மாநிலம் உருவான நாளாக' மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் அல்ல. தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது. எனவே இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும்.

எனினும் தமிழர்களின் அதிகாரப்பூர்வமான 'உரிமை நிலமாக' எல்லை வரையறைகளைப் பெற்றது. எனவே, இந்த நாளை \"தமிழர் இறையாண்மை நாளாக\" விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது. கடந்த 1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலம் உருவான பொன்விழா 2006-ம் ஆண்டு நடந்தது. அதற்கு முன்பாக அன்றைய முதல்-அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சந்தித்து இனியாவது ஒவ்வொரு ஆண்டும் நாமும் நவம்பர் 01-ம் நாளை நமது அண்டை மாநிலங்களைப் போல \"மாநில நாளைக்\" கடைபிடிக்கலாம் என்று கேட்டோம். \"நாம் நமது நிலப்பகுதிகளை இழந்திருக்கிறோம். அதை எப்படிக் கொண்டாடுவது? அதனால் தான் அந்த நாளை எல்லைப் போராட்ட ஈகியர் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்\" என்று அவர் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியது உண்மைதான் எனினும் இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தமிழர் இறையாண்மை நாள்' என அறிவித்து அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது, மத்திய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்கு உறுதி ஏற்கும் நாளே இந்தத் தமிழர் இறையாண்மை நாளாகும். தமக்கென அதிகாரங்களைக் கொண்ட மாநில அரசுகள், அவை சேர்ந்த ஒரு கூட்டரசுதான் இந்தியா - அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தந்த புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட நம்முடைய முன்னோர்களுடைய முடிவு.

ஆனால், அந்த முடிவுக்கு மாறாக இந்திய மத்திய அரசுக்கென அதிகாரப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை மீறி, மாநிலப் பட்டியலில் இருக்கின்ற அதிகாரங்களில் தலையிடுகின்ற நிலை 1950 -களிலேயே துவங்கிவிட்டது. 1951ஆம் ஆண்டிலே இயற்றப்பட்ட தொழிற் சாலைகள் சட்டம், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் 23 ஆவதாக வைக்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் குறைத்தது.1955-ம் ஆண்டில் இயற்றப்பட்ட 'அத்தியாவசிய பண்டங்கள் சட்டம்' மாநில அரசுகள் என்னென்ன பண்டங்களின்மீது வரிவிதிக்கலாம். அவற்றை எப்படிக் கையாளலாம் என்பதை தடுத்துச் சுருக்கியது. 1957இல் இயற்றப்பட்ட 'கனிமவளங்கள் சட்டம்' மாநில அரசுகளின் பொருளாதாரத் தற்சார்புக்கு வேட்டுவைத்தது.

இப்படி தொடர்ந்து மாநில உரிமைகள் குறுக்கப்பட்டதால், பறிக்கப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளான மாநிலக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்தக் குரல் முதலில் தமிழ் நாட்டிலிருந்துதான் எழுந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் வரை மத்திய அரசை ஆண்ட கட்சியும், மாநிலங்களில் ஆண்ட கட்சியும் ஒரே கட்சியாக இருந்த காரணத்தினால் 'மாநில உரிமைகள்' என்கிற பிரச்சினை உட்கட்சிப் பிரச்சினையாக மட்மே முதலில் பார்க்கப்பட்டது. 1967-ம் ஆண்டு தேர்தலில்தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பல மாநிலங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தன. அதன் விளைவாகத்தான் 'மாநில சுயாட்சி முழக்கம் தமிழ் நாட்டிலிருந்து வீறுகொண்டு எழுந்தது.அதுமட்டுமல்ல 1980க்குப் பிறகு மத்திய அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் பின்பற்றிய தாராளமய பொருளாதாரக் கொள்கை. அதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள். அதனால் மாநில அரசுகளும், மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் சுமை மாநில அரசுகளின் தலையில் விழுந்தது. தாராளமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளும், இந்திய மத்திய அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் தொடர்ந்து அதிகாரங்களைத் தம்வசம் குவித்துக்கொண்ட போக்கும்: மாநில இறையாண்மை குறித்து வலியுறுத்த வேண்டியதன் தேவையை அதிகரித்துள்ளன.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என இதுவரைப் பேசிவந்த பாஜகவினர் இப்போது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' எனப் பேசத் தொடங்கி உள்ளனர். இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு மாநில அரசுகளை மத்திய அரசின் பிடிக்குள் கொண்டுவருவதாகும். இந்நிலையில், இதுவரை மத்திய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதன்மூலம் தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.