அடித்து ஆடும் தமிழ்நாடு
இந்தியாவின் மின்னணு உற்பத்தி துறையில் சுமார் 26% பங்களிப்புடன், தமிழ்நாடு மின்னணு வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி மதிப்பு $14.65 பில்லியன் ஆகும். 2025ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23% பங்களிப்புடன், தமிழ்நாடு நாட்டின் முதன்மையான மின்னணு ஏற்றுமதி மாநிலமாக திகழ்கிறது. உலகளாவிய அளவில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. நீண்ட காலமாகவே மின்னணு உற்பத்தி மையமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு, தற்போது தனது விரிவான செமிகண்டக்டர் திட்டம்-2030 மூலம் செமிகண்டக்டர் துறையிலும் தலைமையாக உயர தயாராகி வருகிறது. இதன்மூலம், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் மீண்டும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
கர்நாடகா 4.95 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் முறையே 3.78 பில்லியன் டாலர் மற்றும் 2.72 பில்லியன் டாலர்களை பதிவு செய்துள்ளது. 2024 டிசம்பரில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி $1.534 பில்லியனில் இருந்து 1.524 பில்லியன் டாலராக சிறிது சரிவை கண்டது, ஆனாலும், மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஏற்கனவே, கடந்த 2023-24ம் நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது. இது, இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 39% ஆகும்.
அதே காலக்கட்டத்தில், இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதி $16.48 பில்லியன் ஆகும். கடந்த வருடம் ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா போல அல்லாமல் தமிழ்நாடு இந்த துறையில் அடித்து ஆட தொடங்கி உள்ளது.
ஏற்கனவே பல சுற்றுச்சூழல் உதிரி பாகங்கள் சப்ளையர்களை கொண்டுள்ள தமிழ்நாடு, மின்னணு உதிரி பாகம் உற்பத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், ‘’தமிழ்நாடு மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்’’ என்னும் புதிய திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்த்து, சுமார் 60,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்களை ஈர்க்கும் வகையில், ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சலுகைகளுக்கு இணையான மாநில அளவிலான சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.
இதன்மூலம், மாநிலத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு தரமான ஆதரவு உறுதி செய்யப்படுகிறது. இதைத்தான், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் நேற்று நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். தொழில்துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் வீறுநடை போட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிலையான அர்ப்பணிப்பு உணர்வே பெரிதும் காரணம். தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி - ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கு மிக எளிதாக எட்டப்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை.