தமிழ்நாட்டின் பல இடங்களில் சதம் அடித்தது வெயில்: மதுரையில் 105டிகிரி சென்னையில் 102டிகிரி
அவற்றின் காரணமாக கிழக்கு மேற்கு திசைகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வந்தது. அத்துடன் வட மேற்கு திசையில் இருந்து புகுந்த காற்றும் இணைந்து அரபிக் கடல் வழியாக தெற்கு நோக்கி பயணித்து, வங்கக் கடலில் நுழைந்தது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கோவை, நீலகிரி மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்தது. தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழையும் பெய்தது. உள் மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வந்தது.
இதையடுத்து, அரபிக் கடலில் உருவான காற்றழுத்தம் வடக்கு திசையில் நகர்ந்து மகாராஷ்டிரா வழியாக வடக்கு நோக்கி நகர்ந்து சென்றது. அதேபோல வங்கக் கடலில் ஒடிசா அருகே நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் வடக்கு நோக்கி நகர்ந்து பூடான் பகுதிக்கு சென்றது. இதனால் அந்த பகுதிகளில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு காற்றழுத்தங்களும் வடக்கு நோக்கி நகர்ந்து சென்றதால் தென் பகுதியில் வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று வெப்பம் அதிகரித்து வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. அதன் தொடர்ச்சியாக வேலூரில் 104 டிகிரி வெயில், புதுச்சேரி, பரங்கிப்பேட்டை, சென்னை, ஈரோடு பகுதிகளில் 102 டிகிரி வெயில் நிலவியது. மேலும், கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, திருத்தணி, பாளையங்கோட்டை பகுதிகளில் 100 டிகிரி, சேலம், திருப்பத்தூர், காரைக்கால் பகுதிகளில் 99 டிகிரி வெயில் நிலவியது.
அதன் காரணமாக சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், சேலம், திருவள்ளூர், நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே, ஒருசில இடங்களில் லேசான மழை பெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 7ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும். அத்துடன், தமிழக கடலோரப் பகுதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் 5ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் வீசும். இன்றும் நாளையும் மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.