தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 5 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம்!!
டெல்லி : தமிழ்நாட்டில் 78% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் பிஹாரில் இப்பணி நடைபெற்றது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 5 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவில் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கோவாவில் 99.99%, அந்தமான் நிக்கோபாரில் 89.22% பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்டை மாநிலமான கேரளத்தில் 49.55%, புதுச்சேரியில் 93.04% படிவங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் 37 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
