Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெற்ற பிள்ளைகள் பேச்சை கேட்டு தவெகவுக்கு ஓட்டு போட்டுட்டு நடுத்தெருவுல நிக்குறோம்... தமிழக ரீல்ஸ் அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவில்: பெற்ற பிள்ளைகள் பேச்சை கேட்டு தவெகவுக்கு ஓட்டு போட்டு நடுத்தெருவில் நிற்கிறோம் என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் முன் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு கடன்களை தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி படி 5 ஏக்கர் வரை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் 50% கடனும் தள்ளுபடி செய்ய மறு பரிசீலனை செய்து அறிக்கை வெளியிட வேண்டும். கர்நாடகா அரசு மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.

விவசாய பயன்பாட்டிற்கான மும்முனை மின்சார சேவையை முறையாக வழங்கி, விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து விவசாயத்தை விட விளையாட்டு பெரிது என பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், விவசாயிகள் தினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

மேலும் கடன் தொல்லையால் விவசாயிகள் இறக்கின்றனர். விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டாக விவசாயத்தை விட விளையாட்டு சிறந்தது என பேசினார். அதனை வண்மையாக கண்டிக்கிறோம், அதுபோல நடக்கும் ஆட்சியாளர்கள் எந்த மனநிலையில் ஆட்சி செய்கிறார்கள் என்றால் ரீல்ஸ் மோகத்தில் உள்ளனர். நாங்கள் எங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகள் பேச்சை கேட்டு, தவெகவுக்கு ஓட்டு போட்டு ஏமாந்து நடுத்தெருவில் நிற்கிறோம். தற்போது இதுவரை இல்லாத கஷ்டங்களை அனுபவிக்கிறோம். நம்‌ வாழ்வாதாரம் இந்த ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கண்ணீர் மல்க கூறினர்.

இதில் விவசாயிகள் நஜமுதீன், வெங்கடேசன், முத்துகுமாரசாமி, ராமமூர்த்தி, மகேந்திரன், ஜெயராமன், பன்னீர்செல்வம், சண்முகம், ராமதாஸ், முத்துகுமாரசாமி, முத்துக்குமரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.