Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாட்டில் விமான டிக்கெட்கள் கட்டணம் 4 மடங்கு உயர்வு!

சென்னை: தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு விமான டிக்கெட்கள் கட்டணம் உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 8ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் தூத்துக்குடி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.மேலும், சில பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளன.

சென்னை- மதுரைக்கு வழக்கமாக ரூ.4,730ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.16,700 வரை உயர்ந்துள்ளது சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ.4,640ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.14,683 வரை உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னை- கோவைக்கு ரூ.4,180ஆக இருந்த கட்டணம் ரூ. 14,607ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை மறுநாள் 7ம் தேதியும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானோர் நாளை முதல் தங்களது சொந்த ஊர்களுக்குப் செல்வர். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டதால் பலர் விமானங்களில் பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது. கட்டணம் பல மடங்கு உயர்ந்தபோதிலும், சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் பயணிகள் விலை உயர்வைப் பொருட்படுத்தாமல் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.