Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த 4 ஆண்டுகளில் தமிழக திருக்கோயில்களில் 25,485 திருப்பணிகளுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,948.62 கோடி மதிப்பிலான 25,485 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1,339 கோடி மதிப்பிலான 10.534 திருப்பணிகளை செய்து தருகின்றனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று சென்னை, எருக்கன்சேரி வேதாம்பிகா சமேத விஜயலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, பாரிமுனை, காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயிலில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகள் தொடக்க விழாவில் (பாலாலயம்) கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 2,956 கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்தேறி இருக்கிறது. 3 ஆயிரமாவது குடமுழுக்கு வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர் கோயிலில் நடத்தவுள்ளோம். திருக்கோயில் நிலங்களை அளவிடும் பணியை மயிலாப்பூரில் தொடங்கினோம். அதன் நீட்சியாக 50,001-வது ஏக்கரை காஞ்சிபுரத்திலும், ஒரு லட்சம் ஏக்கரை பெரியபாளையத்திலும் அளவீடு செய்து தற்போது 2,00,001-வது ஏக்கரை அளவிடும் பணியை வரும் 21ம் தேதி திரும்பெரும்புதூரில் தொடங்க உள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகளில் திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7.671.23 கோடி மதிப்பிலான 7.560 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநில வல்லுநர் குழுவினால் 12,104 கோயில்களுக்கு இதுவரை திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,948.62 கோடி மதிப்பிலான 25,485 திருப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் உபயதாரர்கள் மட்டும் ரூ.1,339 கோடி மதிப்பிலான 10.534 திருப்பணிகளை செய்து தருகின்றனர். துணை முதல்வர் திருவல்லிக்கேணியில் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தது குறித்து தமிழிசை தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்கிறீர்கள்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற இந்த ஆட்சியில் அன்னதான திட்டத்தை துணை முதல்வர் துவக்கி வைப்பதில் எந்தவித தவறும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழனி, சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவக்குமார், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், அறங்காவலர்கள் சர்வேஸ்வரன், சீனிவாசன், ராஜேந்திரகுமார், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.