கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ 2026ம் ஆண்டு தேர்தலை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். பாஜ அரசு எந்த விதத்திலும் இந்தியை திணிக்கவில்லை. இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம். அதனால் பாஜ தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது.
தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை பாஜ மேற்கொண்டுள்ளது. அரசியலுக்காக குழந்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு திறன் வளர்ப்பு, தொழில்நுட்ப அறிவு, விரிவுபடுத்தப்பட்ட கல்வி என அரசு மாணவர்களுக்கு தேவையானவை இருக்கிறது. ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்தை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

