‘தொழில்’ என்றால் ஆண்களுக்கு மட்டும்தானா, பெண்களால் சாதிக்க முடியாதா. முதலாளிகளாக வலம் வர முடியாதா எனக் கேட்டது மட்டுமின்றி தமிழகப் பெண்கள் ஒரு படி மேலே சென்று அதிக ஸ்டார்ட் - அப் தொழில் துவங்கிய பெண்கள் உள்ள மாநிலமாக தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
‘நான் ஒரு தொழில் தொடங்க வேண்டும்… ஆனால் முதலீடு எங்கே? அனுபவம் இல்லையே… என்னால் முடியுமா?’ என்று தயங்கிய காலம் மாறிக்கொண்டிருக்கிறது.
இன்று, வீட்டிலிருந்தபடியே தொழில் தொடங்கி அதை லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றும் பெண்கள் இருக்கிறார்கள். சிறிய நகரத்தில் இருந்து உலகச் சந்தையை குறிவைக்கும் பெண் தொழில்முனைவோரும் இருக்கிறார்கள். வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாகவும் பெண்கள் உருவெடுத்து வருகிறார்கள்.
இதற்கெல்லாம் சாட்சியாக இந்தியாவின் ஸ்டார்ட்அப் உலகில் பெண்களின் பங்களிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
76 ஆயிரத்தைக் கடந்த பெண்கள்!
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றில் 76,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையும் பிரமிக்க வைக்கிறது. பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் இணைந்து 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
மெட்ரோ நகரங்களைத் தாண்டிய கனவு பெண்கள் தொழில் தொடங்குவது என்றாலே பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள்தான் நினைவுக்கு வந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது அந்தக் காட்சி மாறிவிட்டது.
Tier-2, Tier-3 நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகம் ஸ்டார்ட்அப் உலகில் காலடி எடுத்து வைக்கிறார்கள். இதற்கு முதல் காரணம் இணையம். அவர்களின் தொழில் களமாக இன்று இணையம் மாறியிருப்பதால் அவர்களால் அவர்களின் ஊரைத் தாண்டி யோசிக்க முடிகிறது.
கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள், கல்வி, தொழில்நுட்பம், நிதிச் சேவைகள் என பெண்கள் நுழையாத துறையே இன்று இல்லை.
எப்படி இது சாத்தியமானது?
இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. பல ஆண்டுகளாக ஏற்பட்ட சில முக்கிய மாற்றங்கள் ஒன்றாக இணைந்ததன் விளைவு இது.
டிஜிட்டல் புரட்சி
முன்பு தொழில் தொடங்க கடை, அலுவலகம், ஊழியர்கள் எனப் பல விஷயங்கள் தேவைப்பட்டன. இன்று சமூக வலைத்தளங்கள், இ-காமர்ஸ் தளங்கள், டிஜிட்டல் பேமென்ட் போன்றவை சிறிய தொழிலையும் பெரிய சந்தைக்கு கொண்டு செல்ல உதவுகின்றன.
முதலீட்டு வாய்ப்புகள்
பெண்கள் தலைமையிலான நிறுவனங்களின் திறனை முதலீட்டாளர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஆரம்ப கட்டத்தில் மட்டுமல்லாமல், நிறுவனங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அரசின் ஆதரவு
ஸ்டார்ட்- அப் இந்தியா போன்ற முயற்சிகள் இந்தியாவில் தொழில் முனைவு சூழலை உருவாக்கியுள்ளன. இன்குபேட்டர்கள், பயிற்சிகள், வழிகாட்டுதல் போன்றவை புதிய தொழில்முனைவோருக்கு துணையாக இருக்கின்றன.
சமூக மனநிலையில் மாற்றம்
‘பெண்கள் வேலைக்குச் செல்லலாம்; ஆனால் தொழில் தொடங்குவதா?’ என்ற கேள்வி மெல்ல மறைந்து வருகிறது.
பெண் ஒருவர் தொழில் தொடங்கினால் குடும்பத்தையும் கவனிக்க முடியாது என்ற பழைய பார்வைக்கு பதிலாக, ‘அவளால் இரண்டையும் சமாளிக்க முடியும்’ என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
முதலீட்டாளர்களின் பார்வையிலும் மாற்றம்!
பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. முன்பு பெண்கள் தலைமை என்றாலே முதலீட்டாளர்கள் நிதி உதவியளிக்க தயங்குவர். ஏனேனில் திருமணம், குழந்தை பேறு, குடும்பம் என சட்டென வேலை, தொழில் என இடைவேளை எடுக்கும் பழக்கம் பெண்களிடம் முன்பு அதிகம் . அதனால் தயங்கினர்.
பெண்கள் நிறுவிய இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை 26.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான முதலீட்டை திரட்டியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் மட்டும் பெண்கள் தலைமையிலான டிஜிட்டல் ஸ்டார்ட்-அப்கள் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை பெற்றுள்ளன.
பெண்கள் பிஸினஸ் கொண்டு வந்த மாற்றங்கள் என்ன?
பெண்கள் தொடங்கும் நிறுவனங்களில் பல, பெண்களின் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளாகவும் இருக்கின்றன.
குழந்தைகள் பராமரிப்பு, பெண் களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வீட்டுத் தொழில்களை எளிதாக்கும் சேவைகள், நிதி சுதந்திரம் போன்ற பல்வேறு தேவைகளை மையமாக வைத்து புதிய தொழில்கள் உருவாகின்றன. இதன் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, பெண்களே தொழில் வாய்ப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் கடக்க வேண்டிய தடைகள்
வெற்றி அதிகரித்தாலும் பாதை முழுவதும் எளிதானதாகிவிடவில்லை.
நிதி திரட்டுவது, சரியான வழிகாட்டியைப் பெறுவது, சந்தையை விரிவுபடுத்துவது, திறமையான ஊழியர்களைத் தேர்வு செய்வது என பல சவால்கள் இன்னும் பெண்களுக்கு இருக்கின்றன.
ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதைவிட அதை தொடர்ந்து வளர்த்து, பெரிய நிறுவனமாக மாற்றுவதுதான் அடுத்த பெரிய சவால்.
இதற்காக பெண்களுக்கு முதலீடு மட்டுமல்லாமல் வழிகாட்டுதல், தொழில்முறை நெட்வொர்க், சந்தை வாய்ப்பு மற்றும் குடும்ப ஆதரவு ஆகியவையும் தேவை.
ஒரு பெண் தொழில் தொடங்கினால்...
ஒரு பெண் தொழில் தொடங்கும்போது, அவருடைய வீட்டில் ஒரு வருமான வாய்ப்பு உருவாகிறது. அவர் சிலரை வேலைக்கு அமர்த்தும்போது, இன்னும் சில குடும்பங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அவருடைய நிறுவனம் வளரும்போது புதிய சந்தைகள் உருவாகின்றன. அவருடைய வெற்றியைப் பார்த்து இன்னொரு பெண், ‘என்னாலும் முடியும்!’ என்று தொழில் தொடங்குகிறார்.
குழு மனப்பான்மை பெண்களுக்கு அதிகம்
இன்று இந்தியா முழுக்க வெற்றிகரமாக செயல்படும் மகளிர் குழுக்களின் சிறப்பே குழுவாக சேர்ந்து செயல்படும் மனப்பான்மை. பொதுவாக ஆண் தன்னிச்சையாக செயல்படுபவன். பெண் துணையாகவும் இருப்பார், துணையையும் எதிர்பார்க்கும் மனம் கொண்டவர்கள். எனவே இவர்களின் தொழில்களில் அதிகம் உடன் அமர வைப்பது தோழிகள், அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்மணிகள், வீட்டிலேயே இருக்கும் பெண்கள், வயதானவர்கள், தன் சொந்தக் குழந்தைகளைத்தான். இதனாலேயே ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு தானும் முன்னேறும் குணம் பெண்களுக்கு அதிகம் உண்டு.
அடுத்த தலைமுறை பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
இன்று தொழில் தொடங்குவதற்கு பெரிய அலுவலகம் தேவையில்லை. பெரிய தொகை முதலீடும் ஆரம்பத்திலேயே அவசியமில்லை.
ஒரு நல்ல யோசனை, அதைச் செயல் படுத்தும் துணிவு, கற்றுக்கொள்ளும் மனநிலை, தோல்வியை எதிர்கொள்ளும் தைரியம். குறிப்பாக தன் சுற்றத்தில் இருப்போரையே பணியாளர்களாக சேர்த்துக்கொள்ளும் திறன். இவைதான் முதல் முதலீடு.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் புரட்சியில் பெண்கள் இன்று பயணிகளாக மட்டும் இல்லை.
அவர்கள் அந்தப் பயணத்தின் தலைவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் தொழில் என்பது தனிப்பட்ட வெற்றி அல்ல, அது ஒரு சமூகத்தின் வளர்ச்சி. அதை சிறப்பாகவே செய்து வருகிறார்கள் தமிழகப் பெண்கள்.
- ஷாலினி நியூட்டன்.


