Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் 1,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் நாளை முதல் 1,565 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

வார இறுதி நாட்களை முன்னிட்டுப் பொதுமக்களின் வசதிக்காகச் சென்னையில் உள்ள முக்கியப் பேருந்து நிலையங்களில் இருந்தும், பிற நகரங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் ஜெரோலின் லிஸ்பன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை அன்று 420 பேருந்துகளும், 11-ந் தேதி (சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 10-ந் தேதி வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், 11-ந் தேதி சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து 10 மற்றும் 11-ந் தேதிகளில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் தலா 20 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 445 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.