Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழகத்தில் 18 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலையில் பொறுப்பு துணைவேந்தர் நியமனத்தால் சர்ச்சை!

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சட்ட விதிகளை மீறி இரண்டு பல்கலைக்கழகங்களில் பொறுப்பு துணைவேந்தர்களை தமிழக அரசு நியமித்திருப்பதாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 18 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை உள்ளது. துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியிருந்தார்.

அவ்வாறு உறுப்பினரை தேடுதல் குழுவில் நியமித்தால் மாநில உரிமைகள் கேள்விக்குறியாகும் எனக் கூறிய திமுக அரசு, முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், துணைவேந்தர்களை நியமிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட தேடுதல் குழுவை அமைப்பது தொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சட்ட மசோதா நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் மூத்த பேராசிரியர்களை பொறுப்பு துணைவேந்தர்களாக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, முதற்கட்டமாக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் பிரபாகரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் ஜெயகாந்தனும் பொறுப்பு துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற பல்கலைக்கழகங்களிலும் பொறுப்பு துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் நான்கு பல்கலைக்கழகங்களில் கூடுதல் பொறுப்பு அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பொறுப்பு துணைவேந்தர்களை நியமிக்கும் அரசின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனங்கள் பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடைமுறைகளுக்கு முரணானவை என கல்வியாளர்கள் தரப்பில் விமர்சனங்களும் எழுந்துள்ளன.