த மிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற ேதர்தலையடுத்து தவெக தலைவரான விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்து விட்டது. இந்த 100 நாட்களில் சர்ச்சைகள், பரபரப்புகள், பதற்றங்கள், விமர்சனங்கள் என்று எதற்குமே பஞ்சமில்லை. ரீல்ஸ் மோகத்தில் நடக்கும் ஆட்சியில் மக்களின் ரியலான பிரச்னைகளை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்ற குமுறல் அனைத்து மட்டங்களிலும் ஒலித்துக் கொண்ேட இருக்கிறது. இந்தவகையில், தமிழகத்தில் தற்போது தலைவிரித்தாடும் விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து, சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்துள்ளது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் என்று மக்கள் தேவைக்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலையேற்றம் கண்டுள்ளது குறித்து தலைவர்கள் ஆதாரத்துடன் பட்டியலிட்டுள்ளனர். இதில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பாண்டு (2026) ஆகஸ்ட் மாதம் வரையிலான விலையேற்றத்தை கோடிட்டு காட்டியுள்ளனர். உதாரணமாக 2024ல் சூரியகாந்தி எண்ெணய் கிலோ ரூ.115.71 ஆக இருந்தது.
இது தற்போது ரூ.193.58 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 67.30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் மல்லி கிலோ ரூ.23.82ல் இருந்து ரூ.46.11 ஆகவும் (93.6%), சர்க்கரை கிலோ ரூ.44.28ல் இருந்து ரூ.53.58 ஆகவும் (21%), அரிசி கிலோ ரூ.55.75ல் இருந்து ரூ.60.25 ஆகவும் (8.1%), உப்பு விலை 11% வரையும் அதிகரித்துள்ளது. இந்த வகையில் பல்வேறு உணவுப்பொருட்கள், காய்கறிகள், பயன்பாட்டு பொருட்களின் விலை உயர்வு குறித்து ஒவ்வொரு கட்சியும் பட்டியலிட்டு காட்டியுள்ளது. இந்த வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு என்பது எளிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை நிலை குலையச்செய்துள்ளது.
பொதுவாகவே ஆட்சி பொறுப்பில் உள்ள தவெக அரசு, குறைகளை சுட்டிக்காட்டினால் அதற்கு முந்தைய ஆட்சிகளை காரணம் காட்டி ‘டேக் டைவர்சன்’ செய்யும் பாணியை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இது ஆதாரம் இல்லாத தகவல் என்று மடைமாற்றம் செய்யும் பணியை மூத்த அமைச்சர்களே செய்வது வேதனைக்குரியது. விலைவாசி ஏற்ற விவகாரத்திலும் இந்த அணுகுமுறையை கடைபிடிக்க கூடாது. விலையேற்றம் என்பது, ஏதோ ஒரு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலை அடிப்படையாக கொண்டது அல்ல. ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரத்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களின் சான்றுகளாகும். எனவே இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு என்ற எண்ண ஓட்டத்துடன் நின்று விடக்கூடாது.
மொத்தத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அறிவித்து விட்டு, மறுகையில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மூலம், அவர்களின் ேசமிப்பை பறிக்கும் சூழல் இருக்க கூடாது. வெளிச்சந்தை விலை உயர்வுக்கு காரணங்களை அடுக்கி தட்டிக்கழிக்க கூடாது. இடைத்தரகர்களின் ஆதிக்கம், பதுக்கல் மற்றும் செயற்கை தட்டுப்பாட்டை தகர்க்கும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அதேநேரத்தில் அரசும் வெளிப்படையான சந்தை தலையீடுகளை முன்னெடுக்க வேண்டும். மொத்தத்தில் சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் மளிகை பொருட்கள், தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு துரிதகதியில் எடுக்க வேண்டும். இதுவே மக்கள் நல மேம்பாட்டில் அக்கறை கொண்ட அனைத்து அமைப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.




