வெலிங்டன்: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 35 வயதான நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளதாவது; "நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த முடிவு, வரும் டி20 உலகக் கோப்பைக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், அணியின் தேர்வில் தெளிவு கொடுக்க உதவும். நீண்ட காலமாக நான் விரும்பிய ஒரு பகுதியாக இது இருந்துள்ளது. அனைத்து நினைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டில் அறிமுகமான வில்லியம்சன், நியூசிலாந்துக்காக 93 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அவர் 2,575 ரன்கள் குவித்து, நியூசிலாந்துக்காக அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 75 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக தலைமை தாங்கினார். அதில் நியூசிலாந்து அணி 39 வெற்றிகளைப் பெற்றதுடன், 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கும், 2021 இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
மேலும் தான், தொடர்ந்து டி20 லீக் தொடர்களில் வெளியாடுவேன் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 2ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க உள்ளார்.
