ஹோபார்ட்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3வது டி20 போட்டி ஹோபார்ட் நகரில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 5 டி20 போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் போட்டி மழையால் டிரா ஆனது. 2வது போட்டியில் ஆஸி வென்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி ஹோபார்ட் நகரில் இன்று துவங்குகிறது.
2வது போட்டியில் அற்புதமாக பந்து வீசி இந்திய அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஷ் ஹேசல்வுட் இன்றைய போட்டியில் ஆடாதது, இந்திய பேட்டர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இம்மாத இறுதியில் இங்கிலாந்து -ஆஸி இடையே ஆஷஸ் தொடர் துவங்கவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் ஓய்வு பெறுவதற்காக, இன்றைய போட்டியில் ஹேசல்வுட் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 2 டி20 போட்டிகளிலும் அவர் ஆட மாட்டார். அதேபோல் இந்திய பவுலர்களில் சிறப்பாக பந்து வீசி வரும் அர்ஷ்தீப் சிங், 15 பேர் கொண்ட இந்திய அணி பட்டியலில் இடம்பெற்றாலும், ஆட வாய்ப்பு தரப்படாது என தெரிகிறது.
இன்று போட்டி நடக்கும் பெலெரிவ் ஓவல் மைதானத்தின் எல்லைக்கோடு ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும். எனவே, ரன் அடிப்பதற்கு எளிதான மைதானமாக இருக்கும். இந்த மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக 2012ல் ஆடியபோதுதான், இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, 86 பந்துகளில் 133 ரன்களை குவித்தார். இந்திய அணி ஏற்கனவே ஒரு போட்டியை இழந்த நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி வாகை சூட தீவிர முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஆஸி அணி, வெற்றி பாதையில் தொடர்ந்து அணிவகுக்க ஆர்வம் காட்டும். எனவே, இந்த போட்டியில் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. போட்டி இந்திய நேரப்படி, இன்று பிற்பகல் 1:45 மணிக்கு துவங்குகிறது.
