அதிகாரத்திற்கும் , பணத்திற்கும் இடையில் நசுக்கப்படும் நீதி , அதில் மாட்டிக்கொண்டு தவிக்கும் எளியவர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டு இரு பெண்கள் விளையாடும் கோர்ட் கேம்தான் ‘‘சிஸ்டம்’’.
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த நேஹா ராஜ்வன்ஷி (சோனாக்ஷி சின்ஹா) ஒரு இளம் அரசு வழக்கறிஞர். தனது திறமையை நிரூபித்து, தந்தையின் பிரபல சட்ட நிறுவனத்தில் இடம் பெற வேண்டும் என்பதே அவரது கனவு. அதற்காக தொடர்ந்து வழக்குகளில் வெற்றி பெற முயற்சிக்கிறார். மேலும் 10 வழக்குகளில் அவர் ஜெயித்தால் தனது சட்ட அலுவலகத்தில் பணியாற்றலாம் என சவால் வைக்கிறார் நேஹாவின் அப்பா.
மறுபுறம், சரிகா (ஜோதிகா) ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபர். நீதிமன்றத்தில் நடக்கும் பல வழக்குகளையும், அங்கே நடக்கும் அநீதிகளையும் அருகில் இருந்து கவனித்து அதனை டைப் செய்து ஆவணங்கள் தயாரிப்பது அவருடைய வேலை.
ஒரு முக்கியமான வழக்கின் மூலம் நேஹாவும் சரிகாவும் சந்திக்கிறார்கள். ஆரம்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரு கட்டத்தில் இருவரும் தோழிகளாக மாறுகிறார்கள்.
உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக இருவரும் இணைந்து போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில், நீதிமன்றத்தில் ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடு, அதிகாரத்தின் செல்வாக்கு மற்றும் சட்ட அமைப்பின் குறைபாடுகள் வெளிப்படுகின்றன. மேலும் நேஹா எடுத்த சிக்கலான வழக்கில் எதிர்தரப்பில் அவருடைய அப்பாவே வழக்கறிஞராக வருகிறார். இதில் நீதி கிடைத்ததா இல்லையா என்பது கதை.
என்னதான் படித்த தந்தையானாலும் மகன் - மகள் பாகுபாடு காட்டும் அவரின் போக்கை எதிர்த்து நின்று தனியே சுதந்திரமாக பயணிக்கிறது சோனாக்ஷி கதாபாத்திரம். தொடர்ந்து விபத்தில் கால்களை இழந்த கணவர், டீனேஜ் மகள் அதற்கான ஓட்டம் என ஜோதிகா கேரக்டர். இரு முதன்மை பெண் கேரக்டர்களும் தங்களின் பெண்ணிய நிலைபாடு, ஆணாதிக்க மனநிலை என எல்லாவற்றிற்கும் பதிலடி கொடுத்து நகர்கிறார்கள்.
அப்பாவே தன்னை மட்டமாக நினைக்கும் இடத்தில் தைரியமாக வீட்டை விட்டு வெளியேறும் மகளாக சோனாக்ஷி சின்ஹாவின் கதாபாத்திரத்தில் இன்னமும் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்களின் குரல் ஒலிக்கிறது. தனக்கென தனி உணர்வுகள், வாழ்க்கை, விருப்பு, வெறுப்பு எல்லாம் உண்டு, அதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன், என் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஜோதிகாவின் கதாபாத்திரமும் சப்தமாகவே பெண் சுதந்திரத்தை எடுத்து வைக்கிறது.
அதிகாரமும் பணமும் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியாது. சட்டமும் நீதியும் மக்களுக்காக இருக்க வேண்டும்; அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக அல்ல. ஒரு மனிதனின் பின்னணி அல்லது சமூக நிலையை வைத்து அவரை மதிப்பிடக் கூடாது. தவறுகளை எதிர்த்துப் பேச ஒருவராவது துணிந்தால், மாற்றம் தொடங்கும். உண்மையான வெற்றி என்பது பழிவாங்குவதில் இல்லை; நீதியை நிலைநாட்டுவதில்தான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் பெண் நினைத்தால் எதையும் சாத்தியப்படுத்தலாம் என்னும் பலதரப்பட்ட சமூகக் கருத்துகளை முன்வைக்கிறது ‘ சிஸ்டம் திரைப்படம்.
இப்படத்தை பெண் இயக்குனரான அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு ‘ அம்மா கணக்கு ’ (இந்தியில் ‘நில் பத்தே சன்னாட்டா’) உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர்.
- மகளிர் மலர் குழு


