சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை
சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையில், சில முக்கிய நகரங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றன. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் மோதல் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து முன்னேறி தலைநகர் டமாஸ்கசையும் கைப்பற்றினர்.இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று 75 இந்தியர்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிரியாவில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படியும், டமஸ்கஸில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசரமான சூழலில் இந்தியர்கள் 963 993385973 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். hoc.damascus@mea.gov.in என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.