Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கட்சியின் சின்னம் தொடர்பான கடிதங்களை தங்களுக்கு அனுப்ப கோரி ராமதாஸ் வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே அன்புமணியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல் சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி கட்சியின் உரிமையை கோர முடியாது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள், கட்சியின் சின்னம் தொடர்பான கடித்ததை எங்களுக்கு அனுப்பாமல் முன்னாள் தலைவர் அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

எங்கள் கட்சி பதிவு செய.யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி. எனவே, கட்சி சின்னம் மற்றும் கட்சி தொடர்பான தகவல்களை எங்கள் முகவரிக்கு அனுப்புமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, அன்புமணி ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்கள் தரப்பு வாத்ததையும் கேட்க வேண்டும் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கில் இணைய மனு தாக்கல் செய்யுங்கள். வழக்கில் சேர்க்கப்படாத உங்கள் வாதத்தை தற்போது கேட்க முடியாது என்று கூறி இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.