புதுடெல்லி: ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் தேசிய செய்தித் தொடர்பாளர் சையத் ஆசிம் வக்கார் அக்கட்சியில் இருந்து விலகி புதன்கிழமை காங்கிரஸில் இணைந்தார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் முன்னிலையில் அவர் காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வக்கார், பாஜவை அகற்ற வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கூறினாலும், நடைமுறையில் அந்தக் கட்சி பாஜவுக்கு எதிராகப் போராடாமல், காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மோதுகிறது.
எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்துவதன் மூலம் பாஜகவுக்கே ஓவைசி சாதகமாக செயல்படுகிறார். நாட்டில் பாஜவை உண்மையாக எதிர்த்து வருவது காங்கிரஸ்தான்’’ என்று தெரிவித்தார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில்உ.பி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவரது விலகல் உ.பியில் தனது கட்சியை விரிவாக்கம் செய்யும் ஓவைசியின் முயற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



