சமையல் எண்ணைய்க்கு என்றென்றும் வரவேற்பு குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால் சமையல் எண்ணெயின் தேவையும், விலையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதனால் எண்ணெய் வித்து பயிர்களுக்கும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உருவாகி வருகிறது. இந்த சூழலில் சூரியகாந்தி பயிரிட்டு விவசாயிகள் நல்ல லாபம் பார்க்கலாம்.சூரியகாந்தியை மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கிறது. தமிழகத்தில் உள்ள எல்லா மண் வகையிலும், எல்லா மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.
நிலம் தயாரிப்பு
நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உரம் அல்லது தென்னை நார்க்கழிவு இட்டு நன்றாக உழுது பண்படுத்தி மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும்.விதை அளவு: ஒட்டு ரகங்களாக இருந்தால் மானாவாரிக்கு ஹெக்டேருக்கு 6 கிலோவும், இறவைக்கு 4 கிலோவும் தேவை. வீரிய ரகங்களாக இருந்தால் மானாவாரிக்கு 7 கிலோவும், இறவைக்கு 6 கிலோ விதையும் போதும்.
விதை நேர்த்தி
மானாவாரியில் விதைக்கும் முன் விதையை சிங்க் சல்பேட் 2% கரைசலில் 12 மணிநேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்திய பின்னர் விதைப்பு செய்யலாம், கார்பென்டாசிம் 2 கிராம் என்ற அளவை ஒரு கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். அல்லது டிரைகோடர்மா 4 கிராம், ஒரு கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.விதைப்பு: ஒரு குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் பாரின் பக்கவாட்டில் 3 செ.மீ. ஆழத்தில் விதைக்கவும், நடவு செய்த 10 முதல் 15-ஆவது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகளைக் களைந்து குழிக்கு ஒரு நல்ல செடி இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.
பயிர் இடைவெளி
ஒட்டு ரகங்களாக இருந்தால் 60-க்கு 30 செ.மீ. என்ற அளவிலும், ரகங்களுக்கு 45-க்கு 30 செ.மீ. என்ற அளவிலும் இடைவெளி விட வேண்டியது அவசியம். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துகளை அந்தந்த பயிர்களுக்கு தகுந்த பரிந்துரையுடன் பயன்படுத்தவேண்டும்.
நுண்ணுயிர் உரம்
உயிர் உரத்தை மண்ணில் இடும்போது 10 பாக்கெட் (2000 கிராம்- ஹெக்டேர்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம் - ஹெக்டேர்) பாஸ்போபாக்டீரியம் அல்லது 20 பாக்கெட் அசோபாஸ் (4000 கிராம்- ஹெக்டேர்) உடன் 25 கி.தொழுஉரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.
நுண்ணூட்டம் இடுதல்
12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன் சாலில் இட்டு பின்னர் விதைப்பு செய்ய வேண்டும். மாங்கனீசு பற்றாக்குறை உள்ள நிலத்துக்கு 0.5% கரைசலை விதைத்த 30, 40 மற்றும் 50வது நாள்களில் தெளிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் முதல் தண்ணீரும், 7-ஆவது நாள் உயிர்த் தண்ணீராக இரண்டாவது தண்ணீரும் விட வேண்டும். விதைத்த 20-ஆவது நாள் மூன்றாம் தண்ணீர், மொட்டு பிடிக்கும் பருவத்தில் 4-ஆவது தண்ணீர், பூ பிடிக்கும் தருணத்தில் 5, 6-ஆவது தண்ணீர், விதைப் பிடிக்கும் தருணத்தில் 7, 8வது தண்ணீர் என்ற வகையில் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
போரான் தெளிப்பு: பூக்கொண்டைகளில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலர ஆரம்பிக்கும் சமயத்தில் வெண்காரத்தை (போரான்) 0.2 (2கி.லிட்.தண்ணீர்) கலந்து பூக்கொண்டைகள் நனையுமாறு தெளிக்கவும். இது மணிகள் நன்றாகப் பிடிக்க உதவும். மேலும், மணிகள் அதிகம் பிடிக்க மகரந்தச் சேர்க்கை ஏற்படும் தருணமான காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை 2 நாட்களுக்கு ஒரு முறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்க்க வேண்டும். 8 முதல் 10 நாட்களுக்கு 5 முறை இப்படி ஒவ்வொரு பூவிலும் செய்ய வேண்டும். அத்துடன் பூக்கள் மலரும் தருணத்தில் ஹெக்டேருக்கு மூன்று பெட்டி வீதம் தேனீ வளர்த்தல் நல்ல பலன் தரும். அருகருகே உள்ள பூக்கொண்டையினை ஒன்றோடொன்று முகம் சேர்ந்து லேசாகத் தேய்த்து விட்டாலும் சிறந்த பலன் தரும்.
அறுவடை
பூவின் அடிப்பாகத்திலுள்ள இதழ்கள் மற்றும் பின்புறம் மஞ்சள் நிறமடைந்து பூக் கொண்டையிலுள்ள விதைகள் கடினத்தன்மை அடைந்திருப்பது முதிர்ச்சியடைந்தமைக்கு அறிகுறியாகும். உலர்ந்த பூக்கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின் விதைகளைத் தனியே பிரித் தெடுத்து சுத்தம் செய்யவேண்டும்.
அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி
அறுவடைக்குப்பின் விதைகளை 8 முதல் 9 சத ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர வைக்க வேண்டும். மானாவாரி பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 1,950 கிலோ வரையும், இறவைப் பயிராக இருந்தால் ஹெக்டேருக்கு 2,250 கிலோ வரையும் மகசூல் கிடைக்கும்.



