சர்வே எண்கள் விடுபட்டதால் பொதுமக்கள் தவிப்பு; ‘ஸ்டார் 3.0’ திட்டத்தால் பத்திரப்பதிவு முடக்கம்: 2 மாதங்களாக விற்பனை பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையின் ‘ஸ்டார் 3.0’ இணையவழி பதிவு திட்டத்தில் புதிய வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள் விடுபட்டுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையை நவீனப்படுத்தும் நோக்கில், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் ‘ஸ்டார் 2.0’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக ‘ஸ்டார் 3.0’ திட்டம் உருவாக்கப்பட்டு, கடந்த ஆக.17ம் தேதி முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது. புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளின் முதல்முறை விற்பனை பத்திரங்கள், வங்கிக் கடனுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணையவழியில் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள், பதிவுத்துறையின் ‘tnreginet’ இணையதளத்தில் இடம்பெறவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட மனைகளை வாங்கியவர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வீட்டுமனை விற்பனையாளர்கள் மற்றும் வாங்கியவர்கள் கூறுகையில், ‘இணையதளத்தில் சர்வே எண்கள் விடுபட்டுள்ளதால் கடந்த 2 மாதங்களாக வீட்டுமனை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மனைகளை வாங்குவதற்காக வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் இதே பிரச்சினை நீடிப்பதால், பொதுமக்கள் மட்டுமின்றி பத்திரப்பதிவுத் துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,’ என்றனர்.
பதிவுத்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்டார் 3.0’ திட்டத்துக்கான மென்பொருளில் வருவாய்த் துறை ஆவணங்களை இணைக்கும் பணியின்போது, சில சர்வே எண்கள் விடுபட்டுள்ளதே இந்தப் பிரச்னைக்கு காரணம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மென்பொருள் நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் சர்வே எண்கள் விடுபட்ட பிரச்சினை சரிசெய்யப்படும்,’ என்றனர். பத்திரப்பதிவை எளிமைப்படுத்தவும், விரைவுபடுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டத்திலேயே அடிப்படைத் தொழில்நுட்பக் குறைபாடு ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


