Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உபரி நீர் மட்டுமே மிஞ்சும்...!

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை திறந்துவிடாமல் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது அண்டை மாநிலமான கர்நாடக அரசு. இது, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காணொலி வாயிலாக பங்கேற்ற தமிழக அதிகாரிகள், ‘’ஏற்கனவே தரவேண்டிய 33 டிஎம்சி நீரும், ஆகஸ்ட் மாதம் தரவேண்டிய 45 டி.எம்.சி. நீரையும் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.

இதை ஏற்று, ஆகஸ்ட் 12ம் தேதி காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு, பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 12,000 கனஅடி நீர்வரத்து இருப்பதை கர்நாடகா உறுதிசெய்ய வேண்டும் என ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து, பிற்பகலில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், அதன் தலைவர் ஹல்தர் தலைமையில் தொடங்கியது. அதில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை உறுதிசெய்யும் வகையில் நாள்தோறும் காவிரி ஆற்றில் தமிழ்நாட்டுக்கு, கர்நாடக அரசு ஒரு டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை கர்நாடகா அரசு மதிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளின்படி, தமிழ்நாட்டிற்கான உரிய நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், “காவிரி படுகையின் நீரியல், வானிலை சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிற்கு ஜூலை 29 (காலை 8 மணி) முதல் 15 நாட்களுக்கு (ஆக. 12 வரை) விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு, நீர் திறக்காத நிலையில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய 26.954 டி.எம்.சி தண்ணீரை திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆக.13) விசாரணைக்கு வருகிறது. அதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம்தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவை நிறைவேற்றக்கோரியும் திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றமாக இருந்தாலும் சரி, ஆணையமாக இருந்தாலும் சரி, எந்த உத்தரவையும் கர்நாடகா அரசு மதிப்பதில்லை. மாறாக, மழையால் அணைகள் நிரம்பினால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை மட்டுமே காவிரியில் திறந்துவிடுகிறது. என்ன நிலை வந்தாலும், உபரி நீர் மட்டுமே உங்களுக்கு தருவோம் என்கிற நிலைப்பாட்டை கர்நாடகா அரசு எடுத்துள்ளது.

இந்த பிடிவாத போக்கு, தமிழகத்துக்கு பேராபத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் தமிழக தவெக அரசு அலட்சியம் காட்டாமல், அட்டை கத்தி வீசாமல், அதிதீவிரமாக போராட வேண்டிய காலக்கட்டம் உருவாகியுள்ளது. தவெக அரசின் வேகம் என்ன? என்பதை டெல்டா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் கண்காணிக்க துவங்கிவிட்டனர்.