Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வாக்காளர் ரகசியத்தை பாதுகாக்க 14 வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைத்து டோட்டலைசர் கருவி மூலம் வாக்கு எண்ணிக்கை: ஒன்றிய அரசு தனது நிலப்பாட்டை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தரப்பில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘வாக்குப்பதிவின் போது குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதை அறிந்துகொள்வதால், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் மற்றும் வாக்காளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒன்றாக இணைத்து, மொத்தமாக வாக்குகளை எண்ணும் ‘டோட்டலைசர்’ கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‘‘வாக்காளர்களின் தனி உரிமையைப் பாதுகாக்கவும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைத் தடுக்கவும் உலகளவில் டோட்டலைசர் முறை பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் நிபுணர்கள், சட்ட ஆணையத்தின் 255-வது அறிக்கை, சட்ட அமைச்சகம் மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் என அனைத்துத்துறை நிபுணர்களும் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

குறிப்பாக 2018-ல் தேர்தல் ஆணையமே ‘‘டோட்டலைசர்களை அறிமுகப்படுத்தும் காலம் வந்துவிட்டது என்று என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் பிரிவு 169-ன் கீழ் மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து விதிகளைத் திருத்த முடியும் என்பதால், பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மட்டுமே தேவை. வாக்காளர்களை அரசியல் கட்சியினர் அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன என்பதற்கான ஆவணங்கள் ஆதாரமாக எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தை மத்திய அமைச்சர்கள் குழுவும் நிராகரித்து உள்ளது.

மேலும் படிவம் 17சி மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் சரிபார்க்கும் நடைமுறை, டோட்டலைசர் பயன்படுத்தினால் சாத்தியப்படாது. ஒப்புகை தாள் ரசீதுகளைச் சரிபார்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும். தேர்தல் ஆணையம் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். தேர்தல் நடத்தை விதிகளில் சட்டப்பூர்வ திருத்தம் கொண்டுவர வேண்டிய அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘டோட்டலைசரை முற்றிலுமாக நிராகரிக்காமல், அதில் உள்ள நடைமுறை தடைகளையே தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இதில் ஒன்றிய அரசு தனது தெளிவான நிலப்பாட்டை தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த முறையை கொண்டு வருவதில் ஏதேனும் தடைகளோ அல்லது எதிர்மறை தாக்கங்களோ ஏற்படுமா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய கோரிக்கை அல்லது பரிந்துரையை ஒன்றிய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இதைத்தொடர்ந்து அதன் மீது ஒன்றிய அரசு தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.