Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் விஜய் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 130, ‘உச்ச நீதிமன்றம் டெல்லியிலோ அல்லது குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் இந்திய தலைமை நீதிபதி அவ்வப்போது முடிவுசெய்யும் பிற இடத்திலோ அல்லது இடங்களிலோ அமைந்திருக்க வழிவகை செய்கிறது’.

இந்த கோரிக்கையானது, 1979ம் ஆண்டு நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டின் ஒரு விவாத பொருளாகவும் இருந்தது. தென்னிந்தியாவில் உள்ள வழக்காடிகள் தங்கள் நீதிசார் தீர்வுகளுக்காக டெல்லி வரை செல்ல வேண்டியுள்ளது. தென்னிந்தியாவின் முக்கிய பெருநகரமாக விளங்கும் சென்னையில், இக்கிளையை அமைப்பது, அனைத்து தென்மாநிலங்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக அமையும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் குழுமமானது, மிக்க சட்ட அறிவும், வாதத்திறமையும் கொண்ட சட்ட வல்லுநர்களை கொண்டுள்ளதால், சென்னையில் அமைக்கப்படும் உச்ச நீதிமன்ற கிளையின் தேவைகளை நிறைவு செய்யும். சென்னை உயர் நீதிமன்றமானது 1862ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் மிகத் தொன்மையான முன்னுரிமை உயர் நீதிமன்றங்களில் ஒன்றானது என்ற கருத்தை 1980ம் ஆண்டிலேயே மாநில அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவித் தரத்திற்கு இணையான குடியிருப்பு வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தவறாமல் மாநில அரசு வழங்கும் என உறுதியளித்திருந்த நிலையிலும், 7.8.2007 அன்று உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு இப்பொருண்மை குறித்த தனது முந்தைய தீர்மானங்களில் இருந்து மாறுபடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என முடிவெடுத்துள்ள நிலையையும், நமது அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டபோது, ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுகும் வாய்ப்பை பெறவேண்டும் என்றே அதனை உருவாக்கிய சான்றோர்கள் விரும்பினர்.

குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள குடிமக்கள் இச்சலுகையை பெறும் வாய்ப்பை டெல்லிக்கும், தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையே உள்ள நெடுந்தொலைவு காரணமாகவே இழக்க நேரிடுகிறது. உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிப்பேராணை (சிவில்) எண்.36/2016 (வி.வசந்தகுமார் -எதிர்- எச்.சி.பாட்டியா மற்றும் சிலர்) வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் 13.07.2016 அன்று பிறப்பித்த உத்தரவில், எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளில், உச்ச நீதிமன்றத்தின் அமர்வை அமைப்பது என்பதும் ஒன்றாகும்.

இவைகுறித்து, ஒரு உறுதியான முடிவை பெறுவதற்காக அரசியலமைப்பு அமர்வு ஒன்று அமைப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதையும், அவ்வாறே, இவ்வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, தென்னிந்திய மாநிலங்களில், சென்னையின் முக்கியத்துவத்தையும், தமிழ்நாடு மாநிலத்தின் நீண்டகால கோரிக்கை மற்றும் பின்வரும் காரணங்களை கருத்தில் கொண்டு, சென்னையில் உச்ச நீதிமன்ற அமர்வை அமைப்பது குறித்த இந்திய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, சாதகமான முடிவை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.