Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நீட் முறைகேடுக்கு எதிர்ப்பு; போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை முடிக்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லியில் கரப்பான் பூச்சி இயக்கத்தின் சார்பாக மாணவர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின் போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வின் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.மாணவர்களுக்கு ஆதரவான தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ‘‘போரட்டத்தின் போது வழக்கறிஞர்களின் குழந்தைகள் கூட தாக்கப்பட்டனர்.

அந்த காணொலிகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நாங்கள் 300 காணொலிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். உயர்மட்டத்திலிருந்து உத்தரவுகள் வந்ததால் காவல்துறை இதுபோன்ற அத்துமீறிய செயல்பாடுகளை செய்துள்ளனர். காவல்துறை ஆணையர் இவை அனைத்தையும் கவனிக்க வேண்டும். சீருடை அணியாத நபர்கள் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை ஏன் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது என்பது குறித்து காவல்துறை ஆணையருக்கும், ஆர்.ஏ.எப் இயக்குநருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘குற்றப்பின்னணி கொண்ட மாணவர்களைத் தவிர, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகளைத் தொடர மாட்டோம் என்ற தனது உறுதிப்பாட்டில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. கொடூரமான மற்றும் மோசமான குற்றப்பின்னணி கொண்ட 2,700க்கும் மேற்பட்டோர் மீதான முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப் பெறப்படாது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\\” நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மாணவர்கள் மீதான கடுமையான மற்றும் கொடூரமான குற்றங்கள் தொடர்பான பின்னணி இல்லாத பட்சத்தில், டெல்லி மற்றும் பிற மாநில அரசுகள் அவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை முடித்து வைக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம். இதில் குற்றப்பின்னணி என்ற சொல் கடுமையான மற்றும் கொடூரமான குற்றங்களை மட்டுமே குறிக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.மாநில அரசுகள் சட்டப்படி அவற்றை முடிக்கவோ அல்லது தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கவோ சுதந்திரமாக முடிவு செய்யலாம் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள்,வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.