புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இரண்டு பேர் ராஜினாமா: பாகிஸ்தானில் அரசியல் பரபரப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைக்கும் புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு நீதிபதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில், அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ‘கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கும் 27வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா, செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, அரசியலமைப்பு விவகாரங்களில் உச்ச நீதிமன்றத்தின் உச்சபச்ச அதிகார வரம்பை நீக்குகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று (நவ. 13) இந்த மசோதாவில் கையெழுத்திட்டு சட்டமாக்கினார்.
நீதித்துறையை சீரமைக்கும் நோக்கிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக சட்டத்துறை அமைச்சர் ஆசம் நசீர் தரார் விளக்கம் அளித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான மன்சூர் அலி ஷா மற்றும் அத்தர் மினல்லா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதிபர் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே அவர்கள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களில், ‘இந்த சட்டத்திருத்தம் பாகிஸ்தான் அரசியலமைப்பின் மீதான மோசமான தாக்குதலாகும்.
இது உச்ச நீதிமன்றத்தை சிதைத்து, நீதித்துறையை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகிறது. எனவே அதிகாரம் குறைக்கப்பட்ட நீதிமன்றத்தில் எங்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாது’ என்று தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக பிடிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து, நீதித்துறையின் அதிகாரத்தை மீட்டெடுக்க அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
