புதுடெல்லி: டெல்லி ஆளுநருக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வழக்கிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். தலைநகர் டெல்லியில் மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இதுதொடர்பான வழக்கில் டெல்லி துணை நிலை ஆளுநரான வினய் குமார் சக்சேனாவும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவர் ஒரு அறிவிப்பை தெரிவித்தார்.
அதில், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவராக உள்ள நான், ஒருமுறை பாட்னா சிறைக்கு சென்றேன். அங்கு டெல்லி துணை நிலை ஆளுநரும் வந்திருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாக சிறையை சுற்றிப் பார்த்தோம். எனவே தற்போது இந்த வழக்கு ஆளுநருக்கு எதிரான தனிப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இருக்கிறது. அதனால் இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியான ஒன்றாக இருக்காது என்பதால், விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன். இருப்பினும் இந்த வழக்கை மற்றொரு அமர்வுக்கு மாற்றி அமைத்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.


