குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைக்கக்கோரி யூடியூபர் சங்கர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றப்பத்திரிக்கைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று யூடியூபர் சங்கர் தாக்கல் செய்திருந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் அலோக் அரதே ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மனுதாரருக்கு எதிரான 15 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன், ”அனைத்து வழக்குகளுக்குமான குற்றப்பத்திரிக்கை ஒரே நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\\” இந்த விவகாரத்தில் ஒரே நீதிமன்றத்தில் வெவ்வேறு வழக்குகளில் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எனவே அனைத்து குற்றப்பத்திரிக்கைகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.