Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2 மகன்கள், ஆதரவாளர்கள் என 5 சீட் போதும் தேர்தலில் போட்டியில்லை பின்வாங்கும் ஓபிஎஸ்: எடப்பாடி, டிடிவிக்கு எதிராக ‘ஸ்கெட்ச்’

முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், அதிமுகவில் மீண்டும் தனக்கு இடம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார். கடைசி வரையிலும் அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் அடுத்த கட்ட நகர்வை ஓபிஎஸ் ரகசியமாக செய்து வருகிறார். இந்த தகவல் தெரிந்த டெல்லி பாஜவை சேர்ந்தவர்கள், ஓபிஎஸ்சிடம் தினமும் போனில் பேசி வருகிறார்கள். நீங்கள் வேறு கட்சிக்கு செல்ல வேண்டாம் என கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

ஆனால் ஓபிஎஸ், அவர்களின் பேச்சை காது கொடுத்து கேட்பது போல் நடித்து வருகிறார். உண்மை என்னவென்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க கூடாது, எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்பதில் ஓபிஎஸ் தீவிரமாக உள்ளார். அதற்கான வேலையை திரைமறைவில் செய்து வருகிறார். எடப்பாடிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சியில் சேருவதற்கான வேலையும் செய்து வருகிறார். அடுத்த வாரம் ஓபிஎஸ் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவதற்கு ஓபிஎஸ்க்கு விருப்பம் இல்லை. டெல்லி பாஜ தலைமை அறிவுறுத்தலின் பேரில், அதிமுகவில் மீண்டும் இணைய தயார் என பேட்டி கொடுங்கள் என ஓபிஎஸ்சிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, ஓபிஎஸ் அதிமுகவில் இணைய ரெடி என கூறினார். ஆனால், எடப்பாடி அவரை மீண்டும் இணைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து, பாஜ தலைவர்களிடம், உங்களால் தான் நான் அவமானம் அடைந்தேன்.

இனி, என்னை கூட்டணிக்கு அழைக்க வேண்டாம் என ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தொடர்ந்து, அதிமுகவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். எடப்பாடிக்கு எதிராக உள்ள கட்சியில் இணைய அவர் முடிவு செய்துள்ளார். அதாவது, மூத்த மகனுக்கு தேனி மாவட்டம் போடி, இளையமகனுக்கு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் ஆதரவாளர்கள் திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஐயப்பன் உள்பட 5 பேருக்கு சீட் கொடுத்தால் போதும் என்ற மனநிலையில் ஓபிஎஸ் உள்ளார்.

முக்கியமாக, வரும் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக வகுக்கும் வியூகங்கள் என்ன என்பது ஓபிஎஸ்க்கு நன்கு தெரியும் என்பதால் அந்த வியூகத்தை உடைக்கும் வேலையை ஓபிஎஸ் செய்து வருகிறார். அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் ஓபிஎஸ், சமீபத்தில் தனது சொத்துகளை 2 மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார்.

இதனால் தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணமும் ஓபிஎஸ்சிடம் இல்லை. எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் அரசியல் ரீதியாக ஓபிஎஸ்க்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தன்னிடம் கூட இருந்து அதிமுக கூட்டணிக்கு சென்ற டிடிவி தினகரனுக்கு எதிராகவும் தேர்தலில் செயல்பட ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்’’ என்றார்.

* சோதனை தீரவில்லை... சொல்லி அழ யாருமில்லை நட்டாத்துல விட்டுப்புட்டாரே... ஆதரவாளர்கள் புலம்பல்

அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதும், தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தனர். குறிப்பாக சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அவர் வருவதற்கு முதல் நாள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நடத்தினர்.

தற்போது, ஓபிஎஸ்சின் அமைதியான நிலைப்பாடு, இன்னும் ஒரு தெளிவான முடிவிற்கு வராதது உள்ளிட்ட காரணங்களால் அவரது ஆதரவாளர்கள் விரக்தி மன நிலைக்கு வந்துள்ளனர். சிவகங்கை மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் யாரும் இதுவரை அதிமுவில் சேரவில்லை.

திமுக அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன் வேறு கட்சியாகவோ, அமைப்பாகவோ இருந்து கூட்டணி வைக்க கூடாது. கட்சிக்காக உழைத்த எங்களுக்கும் எங்கள் தலைவர் ஓபிஎஸ்சிற்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறோம்...’’ என்கின்றனர். ஆதரவாளர்கள் அதிமுகவில் சேராமல் இருக்கும் நிலையில், ஓபிஎஸ்சிடம் எந்த உறுதியான நிலைப்பாடும் இல்லாததால் அவரது ஆதரவாளர்களின் நிலை நட்டாற்றில் விட்ட கதையாகிவிட்டது.

* மாஜி அமைச்சரை மிரட்டும் ஒன்றியம்

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.  இதில், குத்தாலம் ஒன்றிய செயலாளர் விஜிகே.செந்தில் நாதனும் ஒருவர். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்தவர்.

வரும் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம். சீட் தராவிட்டால், கட்சி தாவுவேன் என்றும் பகிரங்கமாக மிரட்டுகிறாராம். எந்த முடிவும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். தலைமையிடம் பேசி சீட் கட்டாயம் வாங்கி தருகிறேன் என்று ஓ.எஸ்.மணியன் அவரை, ஆறுதல்படுத்தி வருகிறாராம்.

* எடப்பாடியா? வேலுமணியா? கிப்ட் கொடுத்து ஓட்டு கேட்கும் கோடீஸ்வரர்

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் தொகுதியை பொறுத்தவரை தற்போது திமுக கைவசம் உள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் காங்கேயம் தொகுதியில் அதிமுகவில் யாருக்கு சீட் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. அதாவது, காங்கேயம் தொகுதியில் அதிமுக சார்பில் 3 பேர் போட்டியிட களத்தில் தயாராக உள்ளனர். இந்த மும்முனை போட்டியில் யாருக்கு சீட் கிடைக்கும்? என்பதில் ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பான நிலையே தொடர்கிறது.

இந்த தொகுதியில் மிகுந்த செல்வந்தரான முன்னாள் எம்எல்ஏ என்எஸ்என்.நடராஜன், இந்த முறை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். எடப்பாடியின் ஆதரவாளரான இவருக்கு சீட் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், கடந்த பொங்கல் பண்டிகையில் இருந்தே இவர் தேர்தல் பணியை துவங்கிவிட்டார். வீடு, வீடாக சென்று, வாக்காளர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை மற்றும் ஹாட்பாக்ஸ் போன்றவற்றை கொடுத்து வருகிறார்.

ஆனால், என்னதான் காக்கா பிடித்தாலும் இங்கு பருப்பு வேகாது என்கிறார்கள், இத்தொகுதி வாக்காளர்கள். தேர்தல் பணியை இவர் துவங்கியுள்ள நிலையில், மறுபுறம் மற்றொருவர் சீட்டுக்காக போராடி வருகிறார். ஜெ பேரவை மாவட்ட இணை செயலாளரான ராமலிங்கமும் இத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். மண்டல பொறுப்பாளர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளரான இவரும் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்.

இவர்களுக்கு மத்தியில், நானும் இருக்கிறேன்... என சொல்லும் அளவுக்கு வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் விஸ்வேஸ்வரனும் களத்தில் வரிந்து கட்டி இறங்கியுள்ளார். இவரது தாத்தா துரைசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவார். அதிமுக பின்புலம் கொண்ட இவரும் தனது ஆதரவாளர்களுடன் தொகுதியில் வலம் வருகிறார். தொகுதிக்குள் மூன்று குரூப்பாக சுற்றுவதால், தொண்டர்கள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.

* சின்ன புள்ளை மாதிரி விசில் ஊதி திரியுதுங்க: அமைச்சர் கலாய்

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், ‘‘ஒரு கட்சியினர் விசில் வைத்து சின்ன பசங்களை போன்று ஊதி திரிகிறார்கள். அது அவர்களுக்கு தான் சரி வரும். அரசியலுக்கு சரிவராது. எம்ஜிஆர் அரசியலில் ஜெயித்தார் என்றால் திராவிடத்தை கையில் எடுத்ததால்தான் அண்ணா, கலைஞரை போல் தமிழக மக்கள் ஏற்றார்கள், ஜெயித்தார்.

திராவிட சிந்தனை, கொள்கை இருந்தால் மட்டுமே தமிழக அரசியலில் நிற்க முடியும். எந்த ஒரு கொள்கை கோட்பாடு இன்றி வந்தவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவரை ரசிகர்கள் கொண்டாடலாம். ஆனால், அது ஓட்டாக மாறாது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி 2.0 வரும். தொடரும்’’ என்றார்.

* நான் ஊழல்வாதி இல்லைன்னு விஜய்ய சொல்ல சொல்லுங்க...கேட்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்றுமாலை நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தவெக தலைவர் விஜய்யை பார்த்து, அதிமுக, திமுக பயப்படுகிறது என செங்கோட்டையன் கூறியுள்ளார். நான் கேட்ட பல கேள்விகளுக்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லை. செங்கோட்டையன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றவர். தண்டனை பெற்றவர்.

விஜய்யும் கருப்பு பணத்தை வைத்து கொண்டு அரசியல் கட்சி நடத்திகிட்டு இருக்கிறார். அவரும் பதில் சொல்லவில்லை. செங்கோட்டையனும் பதில் சொல்லவில்லை. நான் பேசியதற்கு செங்கோட்டையன் இதுவரைக்கும், ஆமாம் என் மீது வழக்கு போட்டாங்க. நான் ஊழல்வாதி. நான் சிறைக்குப் போனேன் என்று சொன்னால் தானே தெரியும். விஜய் கருப்பு பணம் வாங்குவது உண்மைதான் என எத்தனை தடவை சொல்வது? நான் நேர்மையானவன் ஊழல்வாதி இல்லை. எல்லாமே வெள்ளை பணத்தில் தான் வாங்குவேன். என் சம்பளம் இவ்வளவு தான் என்று விஜய் சொல்ல வேண்டியது தானே?’’ என்றார்.