Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தவெகவுக்கு ஆதரவு அளிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி பேரம்..? 15 எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்க வைப்பு

சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளிக்க எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இதனால் 15 எம்எல்ஏக்கள் புதுவையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மையை காட்டாவிட்டால் திமுக அல்லது அதிமுகவை ஆட்சி அமைக்க அழைப்பு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்ட விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தவெக-வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்துள்ளார். அதன்படி, விஜய் முதல்வராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படும். 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம்.

தனித்து போட்டியிட்டதால் தவெகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். தவெக வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் தவெகவுக்கு ஆதரவு அளித்து கடிதம் கொடுத்தனர்.

இதனிடையே தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்ய வேண்டும் என்று தவெக தரப்பில் தூது விட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், அதிமுகவின் நிலைப்பாடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக நேற்று காலை கூட இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர் மாலையில் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தலைமையில் இருந்து உத்தரவு வரும்வரை சென்னையை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என எடப்பாடி பழனிசாமி, எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டார்.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் புதுவையில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் தவெகவில் உள்ள ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க தலா ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் எம்எல்ஏக்களை தக்க வைக்க இந்த நடவடிக்கையை எடப்பாடி பழனிச்சாமி எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கடையில் தவெக ஆட்சி அமைக்க முடியாவிட்டால், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள திமுக அல்லது அதிமுகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அழைப்பு விடுக்கும் பட்சத்தில் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சி அமைக்க வசதியாகவே அதிமுக எம்எல்ஏக்கள் 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்கும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது.

தவெகவுக்கு ஆதரவு இல்லை; அதிமுக அதிரடி அறிவிப்பு

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ள சி.வி.சண்முகத்தின் உறவினர் வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ., பவானி தொகுதி எம்எல்ஏ கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர். இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியை கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறு. எந்த சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு வழங்கவில்லை. அதிமுக பெரிய இயக்கம். தவெகவுக்கு எந்த சூழலிலும் ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி அனுமதியுடன் கூறுகிறேன்’’ என்று கூறினார். இதன்மூலம் நேற்று முழுவதும் ஒரு சிலரால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.