எஸ்ஏ 20 தொடர் ஜேஎஸ்கேவை வீழ்த்தி குவாலிபயர்-2 போட்டிக்கு சன் ரைசர்ஸ் தகுதி: இன்றிரவு பார்ல் ராயல்சுடன் மோதல்
செஞ்சூரியன்: 6 அணிகள் பங்கேற்றுள்ள 3வது சீசன் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர் தென்ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு செஞ்சூரியனில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்-ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மார்க்ரம் 62, டேவிட் பெடிங்காம் 27, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26, மார்கோ ஜான்சன் 23 ரன் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 37, டோவன் கான்வே 30 ரன் அடித்தனர். அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களே எடுத்தது. இதனால் 32 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றிபெற்றது. மார்க்ரம் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று இரவு 9 மணிக்கு செஞ்சூரியனில் நடக்கும் குவாலிபயர் 2 போட்டியில், பார்ல் ராயல்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 8ம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பைனலில் எம்ஐகேப்டவுன் அணியுடன் மோதும்.
