Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோடை விடுமுறையில் குதூகலம் தரங்கம்பாடி கடற்கரையில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்

*மோதி தெறிக்கும் அலையில் நனைந்து உற்சாகம்

தரங்கம்பாடி : கோடை விடுமுறையையொட்டி தரங்கம்பாடி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.தஞ்சையை ஆண்ட ரகுநாதநாயக்கர் மன்னரிடம், டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டின் செய்து கொண்ட வணிக ஒப்பந்தத்தின் படி, 1620ம் ஆண்டு டேனீஷ் கப்பல் படை தலைவர் ஓவ் கிட்டி என்பவர் தரங்கம்பாடி கடற்கரை அருகில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான டேனீஷ் கோட்டையை கட்டினார். மேலும் கோட்டையை நான்கு பக்கமும் அகழி, அதன் வெளியே உயர்ந்த மதில் சுவரினையும் கட்டினார்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த கோட்டையை காண ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், இந்த கோட்டையை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தரங்கம்பாடி கடற்கரை, டேனிஷ் கோட்டை, அகழி, அருங்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் காணப்படுகின்றனர்.

கடற்கரை ஓரம் மதில் சுவரில் அலைகள் மோதி, உயரமாய் சிதறி விழும் கடலில் நீரில் சுற்றுலா பயணிகள் நனைந்து மகிழ்கின்றனர். தற்போது ஒரு பகுதியில் டேனிஷ் கோட்டையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

பணிகள் நடைபெறாத பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் டேனிஷ் கோட்டை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்தி விரைவில் டேனிஷ் கோட்டையை புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.