Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரூ.97.77 கோடி கரும்பு நிலுவைத்தொகை வழங்க உத்தரவு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றி

சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு நிலுவை தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் நேரில் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றுள், 2024-25ம் ஆண்டு அரவை பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் அரவை பணி மேற்கொண்டுள்ளன.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-25 அரவை பருவத்தில் 15.5.2025 வரை 18.81 லட்சம் மெ.டன் அரவை செய்து, 8.40 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 லட்சம் மெ.டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன. அரவை மேற்கொண்ட 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2, சுப்பிரமணிய சிவா, திருப்பத்தூர் ஆகிய 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் அறிஞர் அண்ணா, பெரம்பலூர் ஆகிய 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தாங்கள் கொள்முதல் செய்து, அரவை செய்த 10.30 லட்சம் மெ.டன் கரும்பிற்கு வழங்க வேண்டிய ரூ.329.34 கோடியை தங்கள் ஆலையின் சொந்த நிதியில் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு தொகையை வழங்கி உள்ளன.

மோகனூர், தர்மபுரி, வேலூர், செங்கல்வராயன், திருத்தணி, எம்.ஆர்.கே., செய்யார், மதுராந்தகம் ஆகிய 8 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தாங்கள் கொள்முதல் செய்து, அரவை செய்த 8.51 லட்சம் மெ.டன் கரும்பிற்கு வழங்க வேண்டிய ரூ.272.87 கோடி ரூபாயில் 175.10 கோடி ரூபாய் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தங்கள் சொந்த நிதியிலிருந்து வழங்கியது போக ஆலையின் நிதி ஆதாரம் இல்லாத காரணத்தினால் நிலுவையாக ரூ.97.77 கோடி விவசாயிகளுக்கு வழங்காமல் வைத்திருந்தன.

எனவே, கரும்பு விவசாயிகளின் நலனை பாதுக்காக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு 5,920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகை கடனாக ரூ.97.77 கோடி அனுமதித்துள்ளது. இந்த நிதியுதவியை கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை தலைமை செயலகத்தில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு நிலுவைத்தொகை ரூ.97.77 கோடி உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டு, நிலுவைத்தொகை பெற்று பயனடைந்த திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, சர்க்கரை துறை ஆணையர் அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.