கட்டைக்கரும்பு சாகுபடி...சில பராமரிப்பு தகவல்கள்!
கட்டைக்கரும்பு சாகுபடியின் சில அனுகூலங்கள், பராமரிப்பு முறை குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக உர மேலாண்மை, நீர் மேலாண்மை, அறுவடை உள்ளிட்ட பணிகள் குறித்து இந்த இதழில் காண்போம்.
செயற்கை உரங்கள்
கட்டைக்கரும்பு என்பது முதல் சாகுபடி முடிந்த பிறகு வரும் அடுத்த பருவ சாகுபடி என்பதால் பராமரிப்பு பணியை கவனமாக கையாள வேண்டும். அதில் உரமிடுதல் என்பது மிகவும் அவசியம். கட்டைக்கரும்பு பயிருக்கு முதல்முறை உரமிடும்போது 3 பைகள் யூரியா, 5 பைகள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 1.50 பை பொட்டாஷ் அளிக்கலாம். 45 வது நாளில் இரண்டாம் அளவாக 3 பைகள் யூரியா அளிக்கலாம்.
இயற்கை உரங்கள்
எல்லா பயிருக்கும் இயற்கை உரங்கள் அற்புத பலன் தரும். கரும்புக்கும் அது 100 சதவீதம் பொருந்தும். கட்டைக்கரும்பு சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 2 பைகள் உயிர் மக்கு எரு, 4 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 4 கிலோ பாஸ்போபாக்டீரியா இடலாம். இவை அதிக மகசூலைத் தருவதோடு, கரும்பின் சர்க்கரைத் திறனையும் அதிகரிக்கும்.
களை மேலாண்மை
களை முளைப்பதற்கு முன்னதாக அளிக்கப்படும் அட்ரோஜின் போன்ற களைக்கொல்லிகளைக் கட்டைக் கரும்பு பயிருக்கு அளிக்கக்கூடாது. களை முளைத்த பின் அளிக்கும் களைக்கொல்லிகளான கிராமோக்சோன் (4.50 லிட்டர்) மற்றும் ஃபிமோக்சோன் 2.50 கிலோ / எக்டர் என்ற அளவில் களைக்கட்டுப்பாட்டிற்கு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு கைக்களை எடுக்கலாம்.
நீர் மேலாண்மை
கட்டைக்கரும்பு பயிருக்கு அதன் வாழ்நாளில் மொத்தமாக 18-20 பாசனங்கள் தேவைப்படும். நீர் பற்றாக்குறை ஏற்படும் இடங்களில் சொட்டுநீர்ப் பாசன முறையை மேற்கொள்ளலாம். சில இடங்களில் மாற்று சால் முறையைப் பின்பற்றலாம். இருப்பினும் நீர்வளம் மிக்க இடங்களில் பொதுவான பாசன முறையை, முறையான இடைவெளிகளில் அளிக்கும் பட்சத்தில் அதிக மகசூல் பெறலாம்.
அறுவடை
முதன்மை கரும்பு பயிரை விட கட்டைக்கரும்பு பயிர் விரைவாகவே முதிர்ச்சி (குறைந்தது ஒரு மாதம் முன்பே) அடைந்துவிடும். இதனால் குறிப்பிட்ட சர்க்கரை ஆலைகளில் இருந்து கரும்பு வெட்டுவதற்கான ஆணைகளை முன்னரே பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
நன்மைகள்
கரும்பு விதைக்கரணை சேகரிப்பு, கரணைகளை வெட்டுதல், நடவு போன்ற பணிகள் இல்லாததால் வேலையாட்கள் செலவு வெகுவாக மிச்சமாகிறது. பயிரில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள், சருகுகள் போன்றவை சில காலத்திற்குப் பிறகு மட்கி இயற்கை உரமாக மாறி பயிர்களுக்கு பலன் தரும். முதன்மை கரும்புப் பயிரை விட கட்டைக்கரும்பு பயிர் ஒரு மாதத்திற்கு முன்பே முதிர்ச்சி நிலையை அடைந்துவிடுகிறது.
தீமைகள்
முதன்மை கரும்புப்பயிர் மகசூலை விட கட்டைக்கரும்பு பயிரின் மகசூல் குறைவானது. அதிகளவில் தழைச்சத்து உரம் தேவைப்படும். பெரும்பாலான இடங்களில் கட்டைப்பயிர்கள் புறக்கணிக்கப்படும். கவனமில்லா சாகுபடியால் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு ஏற்படும். குறிப்பிட்ட சில ரகங்களில், சில சூழ்நிலைகளின் கீழ் பூத்தல் ஏற்படுகிறது. மேலும் அறுவடை தாமதமும் ஏற்படுகிறது. குறிப்பிட்ட நிலைகளில் நார் அளவு அதிகரித்து, சர்க்கரை மீட்பு அளவையே பாதிக்கிறது. இதையும் நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.