எனது தாத்தா, அவருக்கு பின் என் அப்பா, இப்போது நான் என 3 தலைமுறையாக ஆலைக்கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். ஆலைக்கு கரும்பை வெட்டி அனுப்பினால் கிடைக்கும் லாபம் குறைந்து கொண்டே வந்தது. அதனால்தான் எனது தாத்தா ஆலைக்கு பாதி, அச்சு வெல்லத்திற்கு மீதி என்று மாற்றி யோசித்து அச்சு வெல்லம் தயாரிக்க ஆரம்பித்தார். அதை அப்படியே எனது தந்தை தொடர்ந்தார். இப்போது நான் தொடர்கிறேன்’’ என தனது கரும்பு சாகுபடி குறித்தும், வெல்லம் தயாரிப்பு குறித்தும் பேசத் தொடங்கினார் தஞ்சாவூர் மாவட்டம் பெரமூரைச் சேர்ந்த அறிவழகன். தனது 5 ஏக்கரில் ஆர்கானிக் முறையில் ஆலைக்கரும்பு சாகுபடி செய்து வரும் இவர், நாட்டுச்சர்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை தயாரித்து அசத்தலான வருமானம் பார்த்து வருகிறார். அவரை சந்தித்தபோது மேலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
``கரும்பு சாகுபடிக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து முறை நன்றாக உழ வேண்டும். நிலம் போதுமான அளவு பொலபொலப்பாக இருந்தால் மூன்று உழவே போதுமானது. உழவு செய்த பிறகு நான்கு அடி அல்லது நான்கரை அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் நடவு செய்ய சுமார் 3 டன் விதைக்கரும்பு தேவைப்படும். விதைக்கரும்பைத் தோட்டத்திலிருந்து தோகையுடன் வெட்டி எடுத்து வர வேண்டும். நடவு செய்யும் இடத்தில் வைத்து தோகையை நீக்கிவிட்டு, கரும்பில் உள்ள ‘கண்’ அல்லது ‘பருக்கள்’ சேதமடையாதவாறு சிறு துண்டுகளாக நறுக்கிப் பார்களில் நட வேண்டும்.
கரும்புத் துண்டுகளை வெட்டும்போது மொட்டுகள் சேதமடைந்தால் முளைப்புத் திறன் பாதிக்கப்படும். சர்க்கரை கட்டுமானம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக 86032 பயிரிடுகிறோம். மேலும் 3256 மற்றும் புன்னகை ஆகிய ரகங்களும் மாற்றி சாகுபடி செய்வோம். 86032 ரகம் அதிக எடையும், நல்ல விளைச்சலும் தரக்கூடியது. கரும்புக்கு மொத்தம் மூன்று முதல் நான்கு முறை உரம் வைக்க வேண்டும். நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் கரும்பு முளைக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை யூரியா இட வேண்டும். 30 முதல் 45 நாட்களில் களை எடுத்த பிறகு, ஒரு ஏக்கருக்கு தலா 2 மூட்டை வீதம் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் மற்றும் யூரியா (மொத்தம் 6 மூட்டைகள்) இட வேண்டும்.
கரும்புக்கு மண் அணைக்கும் தருணத்தில், மீண்டும் தலா 2 மூட்டை வீதம் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் மற்றும் யூரியா இட வேண்டும். உரம் வைப்பதற்கு முன்பாக நிலத்தில் உள்ள தேவையற்ற களைகளை ஆட்களைக் கொண்டு சுத்தமாக அகற்ற வேண்டும். செவ்வழுகல் நோய்தான் கரும்பு விவசாயிகளுக்கு பெரிய பிரச்னை. கரும்பு வளர்ந்து வரும்போது உரத்தை வைத்து சாயாமல் இருப்பதற்காக, மண்வெட்டி அல்லது டிராக்டர் கொண்டு இருபுறமும் மண்ணை அணைத்து விட வேண்டும்.வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். கரும்பு அறுவடைக்குத் தயாராகும்போது அதிக தண்ணீர் பாய்ச்சினால் கரும்பின் எடை அதிகரிக்கும். 3526 போன்ற ரகங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக உரம் தேவைப்படும். இந்த 86032க்கு உரம் வைப்பது குறைவுதான். 9 முதல் 10 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். நல்ல மகசூலும் கிடைக்கும். மற்ற ரகங்களை விட இதில் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
கரும்பில் குறிப்பாக செவ்வழுகல் நோய் தாக்குதல்தான் அதிகம். கரும்பை வெட்டிப் பார்த்தால் உள்ளே சிவப்பாக இருக்கும். சர்க்கரை ஆலைக்கு அனுப்பும்போது பாலில் அந்த நிறம் கலந்துவிடும், சர்க்கரை சரியாக வராது. இதனால் மகசூல் பாதியாகக் குறையும். ஏக்கருக்கு 50 டன் வரவேண்டிய இடத்தில் 20 டன் கூட வராது. இதற்கு முறையான மருந்து இன்னும் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை. முதல்முறை நடவு செய்யும்போது உழவு, உரம் என செலவு அதிகமாகும், லாபம்குறைவாகவே இருக்கும்.அறுவடைக்கு பின் கரும்பின் வேரை அப்படியே விட்டுவிடுவோம், அது மீண்டும் வளரும். இதை `கட்டக் கரும்பு’ அல்லது `மறுதாம்பு கரும்பு’ என்போம். இதில் உழவு மற்றும் உரச் செலவு மிச்சமாகும் என்பதால் லாபம் அதிகமாகக் கிடைக்கும். ஆனால், நோய்த் தாக்குதலும் இந்த முறையில்தான் அதிகமாக இருக்கும். கரும்பை அப்படியே வெட்டி பாதி ஆலைக்கு அனுப்புவோம். தாத்தா காலத்தில் இருந்து (மாட்டு வண்டியில் வைத்து விற்பனை செய்தபோது) வெல்லம் தயாரித்து வருகிறோம். முழுமையாக எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல் வெல்லத்தை தயாரித்து வருகிறோம்’’ என்றார்.
தொடர்புக்கு:
அறிவழகன் - 97872 01105.

