Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2023-24 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை: ரூ.247 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 2023-24 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் அபூர்வா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு அறிவிக்கும் கரும்பு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அறிவித்து வருகிறது.

அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிப்பதுடன் சர்க்கரை ஆலைகளின் செயல்திறனும் அதிகரித்து வருகிறது. வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-25ம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2023-24 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஒன்றிய அரசு 2023-24ம் அரவை பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75ஐ காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.215 வழங்கிடும் வகையில், ரூ.247 கோடி நிதியை மாநில நிதியில் இருந்து அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவை பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2919.75 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.215யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3134.75 விவசாயிகள் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2023-24 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விவரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரை துறை இயக்குநரகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.247 கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.