கிண்டி மருத்துவமனையில் மீண்டும் பரபரப்பு சிகிச்சைக்கு வந்த இளைஞர் திடீர் மரணம்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் நேற்று முன்தினம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், நேற்றைய தினம் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நிறுத்தப்பட உள்ளதாகவும், அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்றும் மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். இந்த சூழ்நிலையில், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (31) என்ற இளைஞர், சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிப்பட்டிருந்தார்.
பித்தப்பை கல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட விக்னேஷ், ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அங்கு போதிய அளவு பணம் செலுத்த முடியாத காரணத்தினால், கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவரை சரியாக பரிசோதிக்காமல், பொதுப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷின் உடல்நிலை மோசமான காரணத்தால், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவர்கள் இல்லாததால் தான் இளைஞர் விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாக கூறி அவருடைய உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். மேலும், மருத்துவர்கள் போராட்டத்திற்குச் சென்றதால் சிகிச்சை அளிக்க வரவில்லை என்றும், எமர்ஜென்ஸி வார்டில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வரவில்லை என்று குற்றச்சாட்டை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.