சென்னை: சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.புறநகர் மின்சார ரயில்களில் அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயணிப்பதால் ஏசி வசதி கொண்ட ரயில்கள் இயக்கினால் எந்த களைப்பும் இல்லாமல், எளிதாக பயணிக்க முடியும் என்ற கோரிக்கை பயணிகளிடம் இருந்து வந்தது. ஏசி வசதி கொண்ட மின்சார ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. மேலும், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் அமைக்கப்படும் என என சட்டசபையில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வலியுறுத்தலின்படி, ஏசி கோச்கள் கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎப்பில் நடைபெற்றது. இதற்கான பணி முடிவடைந்து சோதனை ஓட்டம், வில்லிவாக்கம்,அம்பத்தூர், அரக்கோணம் ஆகிய வழித்தடத்தில் நடைப்பெற்று வரும் நிலையில், வரும் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் மின்சார ஏசி ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில்கள், சென்னை செங்கல்பட்டு, மூர் மார்க்கெட் ஆவடி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி கடற்கரை ரூட்டில் மட்டும் ஏசி ரயில்கள் இயக்கப்படாது. ஏனெனில் இந்த வழித்தடத்தில் 9 பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டுமே இயக்கும் வசதி உள்ளது. புறநகர் ஏசி ரயில்களில் 10 கி.மீ வரை ரூ.29 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 11-15 கி.மீ தொலைவுக்கு ரூ.37 கட்டணமாகவும், 16-25 கி.மீ தொலைவுக்கு ரூ.65 கட்டணமாக நிர்ணயிக்கப்படும். சென்னை கோட்டத்திற்கும் ஒரு ரயில் ஒதுக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சோதனை ஓட்டமானது நடைபெற்றுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு பாராட்டை பெற்றுள்ளது. வெள்ளை நீல வண்ணத்தில் பார்ப்பதற்கு வந்தே பாரத் ரயில்கள் போலவே இந்த ஏசி ரயில் பெட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இருக்கை மற்றும் ஸ்டாண்டிங் வசதியுடன் இந்த ரயிலை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முழுமையாக ஏசி வசதி கொண்ட இந்த ரயில்கள் தற்போது பரிசோதனை முயற்சியாக இயக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே சான்றிதழ் அளித்தவுடன் இந்த ரயில் பெட்டிகள் இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரும்.