மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் மீன்பிடி வலை வாங்க மானியம்
*விண்ணப்பிக்க அழைப்பு
நாகப்பட்டினம் : மீனவர்களுக்கு மீன்பிடி வலை, குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் பெறுவதற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், மீன்உற்பத்தியை பெருக்கிடவும் அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர்களை ஊக்குவித்திட மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மீன்பிடி வலைகள் வாங்கிட மீன்பிடி வலை ஒன்றுக்கு (100 கிலோ கிராம்) மொத்த தொகை ரூ.77 ஆயிரத்தில், பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.30,800, மகளிர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.46,200 வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பொது பிரிவில் ஒரு எண்ணம் மற்றும் மகளிர் பிரிவில் ஒரு எண்ணம் என மொத்தம் இரண்டு எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் ஒரு அலகின் மொத்த தொகை ரூ.75 ஆயித்தில் பொது பிரிவினருக்கு 40 சதவீத மானியம் ரூ.30 ஆயிரம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 60 சதவீத மானியம் ரூ.45 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பொது பிரிவில் 50 எண்ணம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் இரண்டு எண்ணம் என மொத்தம் 52 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்பிடி விசைபடகு உரிமையாளர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசி வழங்கும் திட்டத்தில் செயற்கைகோள் தொலைபேசி ஒன்றின் மொத்த தொகை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 583ல் 40ம சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 50 எண்ணம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.எனவே இந்த திட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் உள்நாட்டு மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.