நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் நடக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதனை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தை ஆய்வு செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை, கடந்தாண்டு (2024) செப்டம்பர் மாதம், ஒன்றிய அமைச்சரவை ஒரு மனதாக ஏற்றது.
அதில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் ஏற்கப்பட்டது. இதையடுத்து ஒரேநாடு ஒரேதேர்தல் மசோதா, கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி நாடாளுமன்றத் தேர்தலுடன், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதா, பாஜ எம்பியான பி.பி.சவுத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இந்தகுழுவானது சட்டநிபுணர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. இந்தநிலையில் தேர்தல்களை நடத்தும் முழு அதிகாரம் படைத்த தலைமை தேர்தல் கமிஷனுடன் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் நிலையில், 4ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதற்கிடையில் நாடாளுமன்றக்குழுவின் ஓராண்டு பதவிக்காலம் ஓராண்டுடன் நிறைவு பெற்றுவிட்டது. இதனால் ஒரேநாடு ஒரேதேர்தல் சட்டமசோதா குறித்த கூட்டத்தை இந்தகுழு நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு, நாடாளுமன்றக் குழுக்களின் பதவிக்காலத்தை 2ஆண்டுகளாக நீட்டிப்பதற்கு பரிசீலனை செய்தது.
இதற்கு ஒன்றிய அரசின் சட்டஆணையமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் இந்தச்செயலானது, மீண்டும் ஜனநாயக மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தின் பிரதான நோக்கம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் பதவிக்காலத்தை குறுக்க வேண்டும் என்பதாகும்.
இதன்மூலம் சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் வரம்பற்ற அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துவிடும். இதனால் மக்களாட்சி தத்துவமும், ஜனநாயகமும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக மாறவும் பெரும் வாய்ப்புள்ளது. இதுகுறித்த தெளிவான விளக்கங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள், பெரும் போராட்டங்களை நடத்தியுள்ளன. இதற்கு பிறகும் தேர்தல் ஆணையத்திற்கு ஒப்பற்ற அதிகாரத்தை வழங்க ஒன்றிய அரசு துடிப்பது ஏன்? என்ற கேள்வியை நீதியரசர்கள் பலரும் எழுப்பியுள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு நாளை நடக்கும் (டிசம்பர் 1ம் தேதி) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக குரல் எப்போதும் இல்லாத வகையில் ஓங்கி ஒலிக்கும். இந்த முழக்கம் என்பது மக்களாட்சி தத்துவத்திற்கு அணைகட்ட நினைப்போருக்கு தடைக்கல்லாக மாறும் என்பது நிதர்சனம் என்கின்றனர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட முன்னோடிகள்.


