ராஞ்சி: அரசு பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி குறித்து பாஜ எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை ஒருநாள் முன்னதாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட அரசுப் பணி நியமன தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் நேற்று முன்தினம் சட்டப்பேரவை நோக்கி பேரணி சென்ற போது மாணவர்களை தடுத்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் விரட்டியடித்தனர். இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் நேற்று கூடியதும், போலீசாரின் தடியடி சம்பவத்தை கண்டித்து பாஜ எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும், கூச்சல் குழப்பம் நிலவிய நிலையில், பணி நியமனத் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிஐடி விசாரணை நடந்து வருவதாகவும், அரசு முன்மொழிந்த அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
அந்த விளக்கத்தை ஏற்காமல் பாஜ எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், திட்டமிட்ட தேதிக்கு ஒருநாள் முன்பாக நேற்றுடன் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. போலீசாரின் தடியடி சம்பவத்தை கண்டித்து எபிவிபி அமைப்பினர் ராஞ்சியில் நேற்று போராட்டம் நடத்தினர். இதே போல பாஜ சார்பில் ஜார்க்கண்ட் முழுவதும் ஒருநாள் பந்த் போராட்டம் நேற்று நடந்தது. இதனால் சில இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாணவர்கள் மீதான போலீசாரின் தடியடி நடவடிக்கைக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



