*கலெக்டரிடம் லெனினிஸ்ட் புகார்
நாகர்கோவில் : கூம்புவடிவ ஒலி பெருக்கிகளால் மாணவ மாணவியர் கல்வி பாதிக்கப்படுவதாக கலெக்டரிடம் லெனினிஸ்ட் புகார் அளித்துள்ளது.மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி மாவட்ட செயலாளர் பால்ராஜ், குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் சுமார் 250 வழிபாட்டு தலங்கள் காணப்படுகிறது. இந்த வழிபாட்டு தலங்களில் பெரும்பாலான வழிபாட்டு தலங்கள் மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி செயல்படுகிறது.
இந்த வழிபாட்டு தலங்களில் காவல் துறையின் அனுமதியின்றி கூம்பு மற்றும் சக்திவாய்ந்த பாக்ஸ் வடிவ ஒலி பெருக்கிகள் கோபுரங்களிலும், மரத்தின் உச்சியிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த ஒலி பெருக்கியில் இருந்து வெளிப்படுகின்ற சத்தம் சுமார் 1 கிமீ முதல் 2 கி.மீ ெதாலைவு வரை கேட்கிறது.
பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் தடை செய்யப்பட்ட நேரத்தில் அதிகாலை 4 மணியில் இருந்து காலை 7 மணி வரையிலும் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. கூடுதலாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலாரம் மணியும் அடிக்கப்படுகிறது.
இதனால் அந்த பகுதி மக்களின் தூக்கம், ஓய்வு பாதிக்கப்படுகிறது. மாணவ மாணவியர் கல்வி பாதிக்கப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே குமரி மாவட்ட நிர்வாகம் சட்டம் ஒழுங்கை விவாதிக்கின்ற மாவட்ட அளவிலான கூட்டத்தில் இது தொடர்பான அஜெண்டா வைத்து விவாதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


