Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர் போராட்டத்தில் அவதூறு கருத்துகள்; மோடியின் ‘மன்னிப்பு’ வீடியோ பதிவால் சர்ச்ைச: சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனம்

புதுடெல்லி: மாணவர் போராட்டத்தின் போது தன்னை விமர்சித்தவர்களை மன்னிப்பதாகக் கூறி பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூலை 31ம் தேதி இரவு 11.06 மணிக்கு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, போராட்டத்தின் போது தமக்கு எதிராக சிலர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அத்தகைய வழிமாறிய குழந்தைகளை தாம் மன்னிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பெண்களின் வார்த்தைப் பயன்பாடு தம்மை அதிர்ச்சியடைய வைத்ததாகவும் தெரிவித்து இருந்தார்.பிரதமரின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உரிமைகளுக்காக போராடிய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடிக்கு மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களை மன்னிப்பதாக பிரதமர் கூறுவது நியாயமற்றது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஹாட்மெயில் நிறுவனர் சபிர் பாட்டியா தனது பதிவில், ‘மாணவர்கள் தங்களது உரிமைகளைக் கேட்டதற்காக பிரதமர் மன்னிக்கிறாரா? பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் போலீசார் நடத்திய வன்முறைக்கு மன்னிப்பு கேட்பதே உண்மையான தலைமைத்துவமாகும்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், போராட்டத்தின் போது பிரதமரை விமர்சித்த 15 வயது சிறுமி மீது நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்ததும், அவர் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐசா அமைப்பும் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மற்றும் பிற மாணவர் அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், எதிர்க்கும் பெண்களை மிரட்டுவதுமே நாட்டின் உண்மையான பண்பாட்டு சீர்கேடு என்றும், இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.