Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் தாலியைக்கூட விட்டுவைக்காத நீங்கள் இந்தியாவிலேயே இல்லாத மாணவரை நீட் தேர்வு எழுத அனுமதித்தது எப்படி?; ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: இந்தியாவிலேயே இல்லாத மாணவரை நீட் தேர்வு எழுத தேசிய தேர்வு முகமை அனுமதித்தது எப்படி? குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறதா? என ஐகோர்ட் கிளை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.  வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 5.5.2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர், ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தெரிய வந்தது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, நீட்தேர்வு எழுதிய மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என அனைவரையும் கைது செய்தனர். மேலும், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் டி.செந்தில்குமார் ஆஜராகி, ‘‘நீட் தேர்வு ஆள் மாறாட்டம் குறித்து சிபிசிஐடி போலீசார் கேட்கும் ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்கவில்லை. போதிய ஒத்துழைப்பு தரவில்லை’’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.புகழேந்தி, ‘‘இந்த வழக்கில் 5 ஆண்டுகளாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? இந்த வழக்கில் நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறது. நீட் தேர்வில் ஒரு மாணவருக்காக டெல்லி, ஜார்கண்ட், உத்தரபிரதேசம் மாநில தேர்வு மையங்களில், ஒரே நேரத்தில் நீட்தேர்வு எழுதியது தெரியவந்துள்ளது. அதில் அதிக மதிப்பெண் (473) கிடைத்த மையத்தை அடிப்படையாக வைத்து, அரசு மருத்துவக்கல்லூரியில் சீட் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ஆள் மாறாட்ட புகார் எழுந்துள்ள நிலையில் மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதித்தது எப்படி?ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்கள் குறித்த விபரங்களை சிபிசிஐடி போலீசார் கேட்டும் தேசிய தேர்வு முகமை எந்தவித பதிலும் கூறாமல் இருப்பது அழகல்ல. தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் தாலியை கூட கழற்றி சோதனை செய்த தேர்வாணையம், அந்த மாநிலங்களில் ஆள் மாறாட்டத்தை மட்டும் எவ்வாறு அனுமதித்தது. இந்தியாவிலேயே இல்லாத மாணவரை, மூன்று இடங்களில் ேதர்வு எழுத அனுமதித்தது எப்படி? எனவே, சிபிசிஐடி போலீசார் கேட்கும் ஆவணங்களை தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும். அதன் பின்னர் தான் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியும். தேசிய தேர்வு முகமை, குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறதா? நீட் தேர்வு விவகாரத்தில் யாரையும் விடுவிக்க முடியாது’’ என கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.